இயக்குனர் சசிகுமாரிடம் உதவியாளராக இருந்தவர் முத்தையா. இவர் குட்டிப்புலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சசிகுமார் லட்சுமிமேனன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம், சுமாரான விமர்சனத்தை பெற்றது.
இந்த திரைப்படத்திற்குப் பிறகு கார்த்தியை கதாநாயகனாக வைத்து கொம்பன் திரைப்படத்தை இயக்கினார். கிராமத்துக் களத்தை கதைக்களமாக கொண்டு, மாமனார் மருமகன் உறவை மையப்படுத்தி பக்கா கமர்சியலாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் முத்தையா விற்கும் இந்த திரைப்படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
இதைத் தொடர்ந்து அவர் விஷாலை வைத்து இயக்கிய மருது திரைப்படமும் வெற்றி பெற்றது. இப்படி தொடர் பாய்ச்சலை முத்தையா எடுத்துக் கொண்டிருக்க, அவர் ஒரே மாதிரியான கதையை வைத்து இயக்குவதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத முத்தையா, தனது பாய்ச்சலை தொடர்ந்து கொண்டே இருந்தார்.
அவரது படைப்புகளுக்கு தென் மாவட்டங்களில் நல்ல வரவேற்பு இருந்ததால், முத்தையாவின் ஒவ்வொரு படங்களும் வசூல் ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தன. இதனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்து கொண்டே இருந்தன. இருப்பினும் கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமன் என அவர் இயக்கிய நான்கு திரைப்படங்களும் ஒரே மாதிரியான கதை அம்சங்களை கொண்டதாகவே இருந்தன.
என்ன இவரது படத்தில் ஹீரோ ஒரு படித்தவனாக இருக்க மாட்டாரா, தொடை தெரிய வேட்டி கட்டி கொண்டே தான் வருவாரா என்று பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதேசமயம் கடைசியாக வெளியான அவரது திரைப்படங்களும் படுதோல்வியை சந்திக்க தொடங்கின. ஆனால் இதையெல்லாம் இடது கையில் டீல் செய்துவிட்டு அவர் ஆர்யாவை வைத்து காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்னும் படத்தை கொடுத்தார். அது வந்த இடம் தெரியாமல் மறைந்து போக அடுத்ததாக அவர் அருண் விஜயை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. அது காலதாமதமானதால் தற்போது தனது மகன் விஜய் முத்தையாவை வைத்து அவர் படம் எடுத்து வருகிறார்.
இது குறித்து பேசி இருக்கும் முத்தையா, ஆர்யாவுடனான படத்திற்குப் பிறகு அடுத்த ஒரு முக்கியமான ஹீரோவோட தான் இணைய இருந்ததாகவும், ஆனால் அவருக்கு கையில் அடிபட்டதால் சூட்டிங் பணிகள் தள்ளிப் போனதாகவும் கூறியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் ஒரு படத்தை எடுத்து விடலாம் என்று தனது மகனை வைத்து இந்த திரைப்படத்தை எடுத்து வருவதாகவும், பள்ளிப் பருவ காதல் மற்றும் அதன் பின்னணியை வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தின் கதை மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.





