தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இதுவரை 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை தந்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி என பிறமொழிகளிலும் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 8ம் தேதி லண்டன் நாட்டில் உள்ள அப்பல்லோ அரங்கில் தனது வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு, இளையராஜா சென்னை திரும்பியிருக்கிறார். அடுத்தடுத்து 13 நாடுகளில் தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்யவும் இசைஞானி முடிவு செய்திருக்கிறார்.
மேலும் சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜா, வேலியன்ட் சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள். 80 இசைக்கலைஞர்கள் இசையில் உருவான அந்த சிம்பொனியை நேரடியாக உயிரோட்டமாக கேட்கும்போது கிடைக்கும் உன்னத உணர்வு கிடைக்காது என்பதால்தான் சொல்கிறேன் என்றும் விளக்கம் தந்திருக்கிறார்.
இந்நிலையில் இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம், இளையராஜாவிடம் சிம்பொனி ஒன்றை உருவாக்கி இருப்பதாக கூறி அதை கொண்டு வந்து போட்டு காட்டியதாகவும், அதை கேட்ட இளையராஜா, இது சினிமா பின்னணி இசை போல் உள்ளது, சிம்பொனியை நீ முறையாக கற்றுக்கொள் என்று இளையராஜா அவருக்கு அறிவுரை சொன்னதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் இளையராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, தனது பேரன் வயதுள்ள சிறுவன் மற்றும் ஒரே சிஷ்யன் என்பதால் லிடியன் நாதஸ்வரத்திற்கு இளையராஜாவே சிம்பொனி பயிற்சி அளித்திருக்க வேண்டும். ஆனால் உனது சிம்பொனி இசை சினிமா பாடல் போல உள்ளது. சிம்பொனியை முழுமையாக கற்றுக் கொண்டு வா என்று கூறியுள்ளார்.
அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. இதை பொதுவெளியிலும் கூறி லிடியனை சிறுமைப்படுத்துவது, பெரிய மனிதனுக்கு அழகா? திரை இசையில் தன்னை மீறி எவனும் இல்லை என்று ஆடிய போது ஏஆர் ரகுமான் வந்து இவரை அடக்கினார். அப்போது ஆரம்பித்த சரிவு 33 ஆண்டுகளாகியும் இன்னும் இளையராஜா மீளவில்லை. இப்போது சிம்பொனியில் தனக்கு போட்டியாக இன்னொரு தமிழன், அதுவும் 20 வயது இளைஞன் வந்து விடக்கூடாது என்னும் எரிச்சல்தான் இப்படி இவரை பேச வைத்துள்ளது என்று ப்ளூ சட்டை மாறன் கடுமையாக இளையராஜாவை விமர்சித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





