முக்கிய அரசியல் தலைவர்கள் பிரபல நடிகர் நடிகைகள் மற்றும் அரசுத் துறையில் உயர்ந்த பதவிகளை வகிப்பவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் போன்றவர்களுக்கு சில மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அது புரளியாகவே இருந்தாலும் சம்பந்தப்பட்டர்களின் வீடுகளில் நிபுணர்குழு வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை நடத்துகிறது.
பெரும்பாலும் இதுபோன்ற போன் வழி மின்னஞ்சல் வழியாக வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் வதந்தியாக தான் இருக்கின்றன. புரளிகளை கிளப்பி விடும் இதுபோன்ற மர்ம நபர்கள் சில நேரங்களில் சினிமா தியேட்டர்கள் பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மிரட்டல் விடுத்து பீதியை கிளப்பி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதட்டமும் ஏற்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான நடிகை நயன்தாரா வீடு ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று போலீஸ் டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுடன் நயன்தாரா இல்லத்துக்கு விரைந்து சென்றனர்.
நயன்தாராவின் வீடு முழுவதும் நிபுணர்கள் குழு தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர்கள் வைத்து சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடத்திய சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது. இது வெறும் புரளி என்பதும் உறுதியானது. மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக பிரபல நடிகர்கள் நடிகைகள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடிகைகள் திரிஷா சொர்ணமால்யா ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சமீபத்தில் டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் வந்தது. தொடர்ந்து நடிகர் எஸ்வி சேகர் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுவரை அவரது வீட்டுக்கு 20க்கும் மேற்பட்ட தடவை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டிலும் சமீபத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜக தலைமை அலுவலகம் மற்றும் தமிழக கவர்னர் ஆர் என் ரவி ஆகியோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து அரசியல் தலைவர்கள் நடிகர் நடிகைகள் போன்ற பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை கிளப்பி விடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.





