இந்த முறை தை பொங்கலுக்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த படம் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம்தான். ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காத சிக்கலால் அந்த படம் கடந்த 9ம் தேதி அறிவித்தபடி வெளியாகவில்லை. நாளை 21ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்த வழக்கு விசாரணை நடக்கிறது. இதில் ரிலீஸ் தேதி முடிவாக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே இந்த பொங்கலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வெளியானது. அதர்வா ரவிமோகன் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத போதிலும் 2 நாட்களில் உலகளவில் ரூ. 51 கோடி வசூலித்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதன்பிறகு நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் வெளியானது. இந்த படத்தை சூது கவ்வும் காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி டைரக்ட் செய்திருந்தார். சத்யராஜ் ராஜ்கிரண் கிருத்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்த இந்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. எம்ஜிஆரை மையப்படுத்திய இந்த படத்திலும் திரைக்கதை அழுத்தமாக இல்லாததால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே தந்தது.
அதன்பிறகு பொங்கல் ரேஸில் அடுத்ததாக களம் இறக்கப்பட்ட படம் தலைவர் தம்பி தலைமையில். இந்த படம் சுருக்கமாக டிடிடி என்று அழைக்கப்படுகிறது. நடிகர் ஜீவா நாயகனாக நடித்த இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஜீவாவுக்கு இந்த படம் சூப்பர் கம்பேக் தந்துள்ளதாக ரசிகர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பராசக்தி படம் கடந்த 9 நாட்களில் மொத்தம் 84 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கடந்த 14ம் தேதி ரிலீஸ் ஆன வா வாத்தியார் படம் கடந்த 5 நாட்களில் மொத்தம் 12.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கடந்த 15ம் தேதி வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் 4 நாட்களில் மொத்தம் 14 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் ரிலீஸ் படங்களை பொருத்த வரை பராசக்தி வா வாத்தியார் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய 3 படங்களில் ஜீவா நடித்த டிடிடி படத்துக்குதான் ரசிகர்களுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் போதிய பெரிய திரை தியேட்டர்கள் கிடைக்காததால் படத்துக்கு பெரிய வசூல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் பராசக்தி திரைகளின் எண்ணிக்கை குறைந்தால் டிடிடி படம் வசூலில் முந்திவிடும் என்று தகவலும் வெளியாகி உள்ளது.





