நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளமாக உச்சநட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். 73வயதிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டு இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
இப்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படம், கூலி என்ற படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தனது 172வது படமான ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.
அதுமட்டுமின்றி அடுத்த கட்டமாக சன் பிக்சர்ஸ், வேல்ஸ் படத்தயாரிப்பு நிறுவனம், சத்யஜோதி பிலிம்ஸ், ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் என நான்கு தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் 3 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் கமிட் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், தமிழ் சினிமாவில் ஆக்சன்கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் சமீபத்தில் சென்னையில் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்த நிலையில், இருவரது காதலையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட அர்ஜூன், தம்பி ராமையா குடும்பத்தினர் சிறப்பாக அந்த திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தனர்.
நேற்று, உமாபதி – ஐஸ்வர்யா தம்பதி திருமண வரவேற்பு விழா சென்னையில் மிக சிறப்பாக நடந்தது. இதில் திரைபிரபலங்கள் பலரும் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சத்யராஜ், சசிக்குமார், பிரசன்னா, சினேகா என பல நடிகர், நடிகைகள் இதில் கலந்துக்கொண்டனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் வருகை தந்தார். மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவரது கையில் இருந்த கிப்ட் பாக்ஸை மணமக்களிடம் கொடுக்க நீட்டினார். அதை யாருமே வாங்கிக்கொள்ளவில்லை. இதனால் அப்செட் ஆன ரஜினிக்கு மணமக்களுக்கு பின்னால் இருந்த சிறிய மேடையில் அந்த கிப்டை வைத்துவிட்டு, மணமக்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார். இப்படி விவிஐபிகள் தரும் கிப்டை வாங்கி வைக்க பின்னால், முக்கிய நபர்களை நிறுத்தாமல் விட்டதுதான், ரஜினியின் இந்த தர்மசங்கடத்துக்கு காரணம்.





