தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து பிறகு நடன அமைப்பாளராக மாறியவர் ராகவா லாரன்ஸ். விஜய், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ரஜினி என பலருக்கு நடனம் அமைத்திருக்கிறார். அதன் பிறகு அற்புதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பிறகு இயக்குநர் அவதாரம் எடுத்த லாரன்ஸ் காஞ்சனா சீரிஸை இயக்கினார். அவற்றில் காஞ்சனாவும், காஞ்சனா 2வும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதனையடுத்து வந்த பாகங்கள் தோல்வியை சந்தித்தன. லாரன்ஸ் நடிப்பு மட்டுமின்றி ஏழைகளுக்கு பல உதவிகளை செய்துவருகிறார். அதற்காகவும் அவரை பலரும் ரசிக்கின்றனர்.
தொடர்ந்து நடிகராக நடித்துவரும் லாரன்ஸ் தற்போது பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதன் முதல் பாகத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டானதால் இந்த பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். மேலும் லாரன்ஸின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை எனவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் குறித்து அவரது தாய் ஒரு பேட்டியில் பேசுகையில், “ராகவா லாரன்ஸுக்கு சிறிய வயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். அவனுக்கு 15 வயது இருக்கும். அந்த சமயத்தில் அவனது தந்தை உயிரிழந்துவிட்டார். அந்த உயிரிழப்பை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.
கணவர் உயிரிழந்துவிட்டதால் குடும்பத்திற்காக நான் வேலைக்கு சென்றேன். அப்போது பேருந்தில் செல்வதற்கு என்னிடம் பணம் இருக்காது. அதனால் தினமும் நான்கு கிலோமீட்டர் நடந்துதான் வேலைக்கு செல்வேன். இவை அனைத்தையும் பார்த்து லாரன்ஸ் ரொம்பவே வருத்தப்படுவார். அப்பா இல்லாமல் சாப்பாட்டுக்கு நானும் பிள்ளைகளும் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அந்த சமயத்தில் எனது தம்பி எனது அம்மா எங்களுக்கு உதவி செய்தார்கள்.
ஒருகட்டத்தில் குடும்பத்தில் வறுமை ரொம்பவே இருந்தது. எனவே லாரன்ஸால் படிப்படை தொடர முடியவில்லை. அவருக்கு நடனம் மீது ஈடுபாடு அதிகம் இருந்ததால் டான்ஸர் கார்டு வாங்கி கொடுத்து அதில் சேர்த்துவிட்டேன். அந்த கார்டு வாங்கக்கூட எனது கையில் பணம் இல்லை என்பதுதான் உண்மை. அந்த சமயத்தில் சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயந்தான் பணம் கொடுத்து உதவி செய்தார்.
அதனையடுத்து லாரன்ஸுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு எந்தப் படத்திலும் கிடைக்கவில்லை. இவன் வாய்ப்பு கேட்டு போன இடத்தில் எல்லாம் நீ ரொம்பவே கருப்பாக இருக்கிறாய் என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். அப்போதும் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் என்கூட நீ வா என்று லாரன்ஸை உதவியாளராக படப்பிடிப்புக்கு அழைத்து சென்றார். அப்போதுதான் ரஜினி லாரன்ஸை பார்த்து அவரது வீட்டுக்கு வரவழைத்து சிபாரிசு கடிதத்தை கொடுத்தார்” என்றார்.





