தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகர்களில் ஒருவராக இருப்பவர் மனோ. இவர் கடந்த 1980 களின் இறுதியில் பல பிரபலமான பாடல்களைப் பாடி தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக மாறினார். குறிப்பாக மதுர மரிக்கொழுந்து வாசம், அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம், வா வா வா கண்ணா வா, செண்பகமே செண்பகமே, வேலையில்லாதவன்தான் வேலை தெரிஞ்சவன்தான் வீரமான வேலைக்காரன் போன்ற பல பாடல்கள் மூலம் பாடகர் மனோ மிகப் பெரிய அளவில் சில தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றவர்.
இசைஞானி இளையராஜா இசையில் மனோ பாடிய பல நூற்றுக்கணக்கான பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று இருக்கின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், அர்ஜுன், முரளி என பல முன்னணி நடிகர்களுக்கு பாடல்கள் பாடிய பாடகர் மனோவின் பல பாடல்கள் இப்போதும் டிரண்டிங் இருக்கின்றன. தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே பாடல் போன்ற பல பாடல்களை சொல்லாம்.
இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கிய சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனின் நண்பராக மனோ நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போதும் பாடகர் மனோ, சினிமாவில் பாடிக் கொண்டிருக்கிறார். டிவியில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளில் நடத்தும் இசை கச்சேரிகளில் பாடகர் மனோ பங்கேற்று தனது பாடல்களை தொடர்ந்து பாடி வருகிறார். பாடகர்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் கே ஜே ஜேசுதாஸ் மலேசியா வாசுதேவன் வரிசையில் மனோவும் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பின்னணி பாடகர் மனோவுக்கு சாஹிர், ரபீக் என்ற மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கி உள்ளனர். கால்பந்து விளையாடிவிட்டு உணவு அருந்தச் சென்ற அந்த மாணவனை பாடகர் மனோவின் மகன்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து சாஹிர், ரபீக் ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், மனோவின் இரண்டு மகன்களும் தலைமறைவையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மனோவின் மகன்களின் நண்பர்கள் ரெண்டு பேரை போலீசார் பிடித்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





