சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ள நடிகர்களுக்கு பட்டப் பெயர்கள் ஒரு கட்டத்தில் வந்து விடுகின்றன. அது தமிழில் மட்டுமல்ல தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என எல்லா மொழி சினிமாக்களிலும் அபிமான நடிகர்களுக்கு ஒரு பட்டப் பெயர் வைத்து ரசிகர்கள் அழைப்பது வழக்கமாகி விட்டது.
இதில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே உரியதாக உள்ளது. இதே போல் மலையாள சூப்பர் ஸ்டார் கன்னட சூப்பர் ஸ்டார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்றும் சில முன்னணி நடிகர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
அதே போல் தெலுங்கு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. தமிழில் கல்லுக்குள் ஈரம் என்ற படம் மூலம் பாரதிராஜா இவரை நாயகியாக அறிமுகப்படுத்தினார். மன்னன் படத்திலும் ரஜினிக்கு மனைவியாக நடித்திருப்பார். தெலுங்கில் இவர் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டார்.
ஆனால் இப்படி தங்களை அடைமொழி வைத்து பட்டப் பெயர்களுடன் அழைப்பதை ஒரு சில நடிகர்கள் விரும்பவில்லை. அது தேவையற்ற சர்ச்சை, விமர்சனங்களை ஏற்படுத்துகின்றன என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் அஜீத்குமார் என்னை இனி யாரும் அல்டிமேட் ஸ்டார் ஆசை நாயகன் தல என அழைக்க வேண்டாம். அஜீத்குமார் அல்லது ஏகே என அழைத்தால் போதும் என்று அறிவித்து விட்டார்.
சில மாதங்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசனும் உலக நாயகன் சூப்பர் ஆக்டர் கலைஞானி டாக்டர் பத்மஸ்ரீ என்று யாரும் இனி என்னை அழைக்க வேண்டாம். கமல்ஹாசன் அல்லது கமல் என்று அழைத்தால் போதும் என்று அறிவித்து விட்டார். அந்த வரிசையில் இப்போது நடிகை நயன்தாராவும் சில தினங்களுக்கு முன் இனிமேல் என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம். நயன்தாரா என்று மட்டும் குறிப்பிடுங்கள் என்று கூறி அறிக்கை வெளியிட்டார்.
இதுகுறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, நடிகை நயன்தாராவை ரசிகர்கள் யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்ததே இல்லை. அவராக தான் படத்தில் டைட்டில் கார்டில் அப்படி போட்டுக் கொண்டார். உண்மையில் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்தது அவரது கணவர் விக்னேஷ் சிவன் மட்டும்தான். அதை அவரிடமே நேரடியாக சொல்லாமல், அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று கிண்டல் செய்திருக்கிறார்.





