நடிகர் விஜய் நடித்த லியோ படம், வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு, அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வரவுக்காக விஜய் ரசிகர்கள், வெகு ஆவலாக காத்திருக்கின்றனர்,
விஜய் நடித்த முந்தைய படங்களான பீஸ்ட், வாரிசு படங்கள் சரியாக போகாத நிலையில், லியோ படத்துக்கான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துள்ளது. படம் ரிலீஸ் ஆக ஒரு வாரம் உள்ள நிலையில், கடந்த 5ம் தேதி லியோ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதுவரை, 50 மில்லியன் பார்வையாளர்களை, இந்த டிரெய்லர் கடந்து சாதனை படைத்துள்ளது.
லியோ டிரெய்லர் வெளியான அன்று, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களில், லியோ டிரெய்லர் திரையிடப்படட்டது. இதில் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் டிரெய்லர் பார்க்க வந்த விஜய் ரசிகர் கூட்டம், அங்கிருந்த சீட்கள், பொருட்களை உடைத்து, சேதப்படுத்தி வெறியாட்டம் ஆடியது பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்களின் இந்த தகாத செயலுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லியோ படத்தின் டிரெய்லரில் விஜய் பேசும் ஆபாச வார்த்தை ஒன்று இடம்பெற்று அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமா தியேட்டர்களில் தணிக்கை துறை அதாவது, சென்சார் போர்டு அனுமதிக்காத எந்த ஒரு காட்சியையும் திரையிடக்கூடாது என்பது முக்கிய விதிமுறையாக உள்ளது. அந்த முக்கிய விதிமுறையை மீறி, லியோ டிரெய்லர் தியேட்டர்களில் காட்டப்பட்டது சட்டப்படி குற்றமாகும். இதற்காக, தணிக்கை துறை தியேட்டர் நிர்வாகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள லியோ டிரெய்லர் திரையிட்ட தியேட்டர்களுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தணிக்கை செய்யாத, சென்சார் அனுமதி பெறாமல், லியோ படத்தின் டிரெய்லரை திரையிட்டதற்காக, காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எந்த மூலத்தின் அடிப்படையில் இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு காட்டப்பட்டது என்பதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என, நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தியேட்டர் நிர்வாகங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், விஜய் ரசிகர்கள் வெறியாட்டம் போட்டு சேதப்படுத்திய கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு மட்டும், இதுவரை சென்சார் போர்டு தரப்பில் இருந்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அந்த தியேட்டரின் உரிமையாளரின் மகன், பாஜக கட்சியில் இருப்பவர் என்பதுதான் இதற்கு காரணம் என்ற ஒரு தகவல் பரவி வருகிறது. அதே வேளையில் தியேட்டரில் விஜய் ரசிகர்கள் வெறியாட்டம் ஆடி செய்த சேதம் குறித்து இதுவரை தியேட்டர் நிர்வாக தரப்பிலும் புகார் எதுவும் தரப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.





