நடிகர் அஜீத்குமார், தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது நான்கு நடிகர்கள் மட்டுமே நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜீத்குமார் இந்த நான்கு நட்சத்திரங்களை நம்பி பணம் முதலீடு செய்தால், அது எத்தனை நூறு கோடிகளாக இருந்தாலும், லாபம் வருகிறதோ இல்லையா நஷ்டம் நிச்சயம் வராது.
அதனால் விஜய் நடித்த பீஸ்ட், லியோ படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றன. துணிவு, வலிமை படங்களும் அஜீத்குமாருக்கு மிகப்பெரிய வசூலை தந்தன. ஜெயிலர் ஒரு வன்முறை படமாக விமர்சிக்கப்பட்டாலும் வசூலில் சம்பவம் செய்தது. விக்ரம் படத்துக்கு பிறகு, கமலும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறார்.
இப்போது நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை மறுமணம் செய்துள்ளார். உண்மையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய முதல் இரண்டு படங்கள் பிளாப் ஆன நிலையில், மார்க் ஆண்டனி ஒன்றுதான் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
எனினும் அவருக்கு நடிகர் பிரபு தன் மகளை திருமணம் செய்து வைக்க முன்வர முக்கிய காரணம், அடுத்து அவர் அஜீத்குமாரை வைத்து படம் இயக்க போகிறார். எனவே, அஜீத்குமாரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதால் தமிழ் சினிமாவில் முக்கியமான, முன்னணி இயக்குநராக ஆதிக் ரவிச்சந்திரன் பார்க்கப்படுகிறார். இதனால் அவரை அன்னை இல்லம் மருமகனாக்க ஏற்றுக்கொண்டார் நடிகர் திலகம் சிவாஜியின் வாரிசு பிரபு.
வழக்கமாக அஜீத்குமார், தன்னை இயக்கிய இயக்குநர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பார். அதுதான் வழக்கம். ஆனால் அஜீத்குமாரை வைத்து மங்காத்தா என்ற ஹிட் படம் கொடுத்த இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு அஜீத் மீண்டும் வாய்ப்பு தரவில்லை. கேரவனுக்குள் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட வேண்டாம் என அஜீத்குமார் எச்சரித்தும், அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த பிரச்னைதான் இதுவரை வெங்கட் பிரபுவை தன் பக்கம் நெருங்க விடாமல் அஜீத்குமார் வைத்திருக்கிறார். ஆனால் அதே வேளையில் இப்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் விஜய் 68 படம் செம ஹிட் ஆகி, மாஸ் சக்சஸ் படமாக அமைந்தால் நிச்சயம் அஜீத்குமாரிடம் இருந்து வெங்கட்பிரபுவுக்கு அழைப்பு வரும் என்று இன்டஸ்ட்ரியில் ஒரு பேச்சு இருக்கிறது. ஒருவேளை அப்படி நடந்தால், அதற்கு விஜய் 68 படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் விஜய்தானே காரணம் என்று சட்டை காலரை தூக்கி விட்டுக்கொள்கின்றனர் விஜய் ரசிகர்கள்.




