கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது மெய்யழகன் திரைப்படம். 96 திரைப்படத்தை இயக்கியிருந்த பிரேம்குமார் இதனை எடுத்திருந்தார். உறவுகளின் உன்னதத்தை எடுத்துக் கூறிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. மிக முக்கியமாக கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வா வாத்தியார் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் கார்த்தி. சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் என இரண்டு திரைப்படங்களை கொடுத்த நலன் குமாரசாமி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். ராஜ்கிரண் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக வருகிறார். படத்தில் தீவிர எம்ஜிஆர் ரசிகராக நடித்திருக்கிறார் கார்த்தி. முழுக்க முழுக்க கமர்சியல் திரைப்படமாக இது இருந்தாலும் சற்று வித்தியாசமாகவே இருக்கும் என்று பலரும் சொல்லி வருகிறார்கள். வரும் டிசம்பர் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்திருக்கும் சர்தார் 2 திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வர இருக்கிறது. எஸ் ஜே சூர்யா இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இதன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றது. இதன் காரணமாக இதன் இரண்டாம் பாகத்தை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
முதலில் தீபாவளிக்குதான் இந்த திரைப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக மார்ஷல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இதில் கதாநாயகியாக வருகிறார். முழுக்க முழுக்க கடல் சார்ந்த பகுதியை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் தமிழ். இவர் ஏற்கனவே விக்ரம் பிரபுவை வைத்து டானாக்காரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
ராமேஸ்வரத்தில் இதன் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்கள். 1960களில் இந்த திரைப்படத்தின் காலகட்டம் நடப்பது போன்று படமாக்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக எடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. நடிகர் திலகம் பிரபு, சத்யராஜ், மலையாள நடிகர் லால், ஈஸ்வரி ராவ், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. வடிவேலு இதில் இடம் பெற்று இருப்பதாக ஆரம்பத்தில் இருந்து கூறப்படும் நிலையில் அது குறித்த அதிகார தகவல் எதுவும் வெளியாகவில்லை.





