இயக்குநர் சேரன், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு இயக்குநர். சினிமாவில் வாழ்க்கையை படம் எடுத்தவர்களுக்கு மத்தியில், வாழ்க்கையை சினிமாவாக்கி காட்டிய ஒரு யதார்த்த படைப்பாளி. சினிமாக்காரராக இருந்தும், அந்த பாதிப்பு இல்லாத எளிய மனிதராக வாழ பழகியவர். நல்ல படைப்புகளை தருவதில் இன்னும் தீவிர முனைப்பாக இருப்பவர்.
பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடிக்கட்டு, இன்னொரு தேசிய கீதம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி என, சேரனின் படங்கள் வாழ்க்கையை சொன்ன படங்களாக இருந்தன. இயக்குநர் கே.எஸ் ரவிக்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். எனினும் அவரை போல, கமர்ஷியல் படங்களாக இல்லாமல், யதார்த்த சினிமாவை இயக்கியவர்.
கடந்த 1990, 2000ம் ஆண்டுகளில் சேரனின் படங்கள் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், ஒரு கட்டத்துக்கு பிறகு அவரது படங்கள் பேசப்படவில்லை. அதனால் இயக்குநராக இருந்து, சேரன் முழுநேர நடிகராக மாறினார். சொல்ல மறந்த கதை, பிரிவோம் சந்திப்போம், முரண், திருமணம் போன்ற படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.
இந்நிலையில் இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிரச்னையில் பலரும் அமீருக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் அமீரின் ஆதரவு படை என்று அவர்களை அழைக்கும் அளவுக்கு நாளுக்கு நாள் அமீர் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி விட்டது.
அந்த வகையில், இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில், படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மை, உண்மை, நாணயத்தை நான் அறிவேன். நீங்கள் ( ஞானவேல் ராஜா) சொன்ன வார்த்தைகள் முற்றிலும் பொய்யானது. சூர்யாவும், கார்த்தியும் உங்களை கண்டித்திருக்க வேண்டும்.
அமீர் மந்தையில் நின்றாலும் நீ வீரபாண்டி தேரு, காலம் நூறு கடந்தாலும் பணமும், புகழும் கண்ணை மறந்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே. திமிராய் இரு. நீயின்றி அவர்கள் இல்லை என்ற கர்வம் மட்டும் போதும். உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.





