இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான படம் விடுதலை. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி, கதாநாயகனாக நடித்திருந்தார். கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் சூரியின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அந்த கேரக்டராகவே அவரை இயக்குனர் வெற்றிமாறன் வாழச் செய்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரின் சகோதரி பவானி ஸ்ரீ நாயகியாக நடித்திருந்தார். வாத்தியார் பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன் போலீஸ் எஸ்பியாக கௌதம் மேனன் போலீஸ் அதிகாரிகளாக சேத்தன் இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
குறிப்பாக இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள், ரசிகர்களின் மனதை மயக்கியது. அதிலும் வழிநெடுக காட்டுமல்லி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங் ஆனது. கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி விடுதலை படம் வெளியான நிலையில், அந்த ஆண்டிலேயே செப்டம்பர் அல்லது அக்டோபரில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஓராண்டு கழிந்த நிலையில் அதாவது விடுதலை படம் வெளியாகி 20 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி விடுதலை 2 படம் வெளியானது. விடுதலை முதல் பாகத்தில் சூரி படம் முழுவதும் வருவார். ஆனால் விஜய் சேதுபதி நான்கைந்து காட்சிகளில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்வார்.
இந்த முறை 2ம் பாகத்தில் படம் முழுவதும் விஜய் சேதுபதி வரும் நிலையில், சூரி கேமியோ ரோலில் நடித்திருப்பது போல் சில காட்சிகளில் வந்து செல்கிறார். இது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது. அதுமட்டுமின்றி படம் முழுவதும் கம்யூனிச தத்துவம், போராட்டங்கள் என ஒரு தரப்பு ரசிகர்களை இந்த படம் அவ்வளவாக திருப்தி செய்யவில்லை.
கலவையான விமர்சனங்களை பெற்ற விடுதலை 2 படம் ரிலீஸாகி கடந்த 15 நாட்களில் இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. ஆனால் விடுதலை முதல் பாகம் வசூல் ரூ. 58 கோடி என்ற நிலையில் விடுதலை முதல் பாகத்தை விட 2ம் பாகம் வசூலில் முந்தியுள்ளது. நெட்பிளிக்ஸில் விடுதலை 2ம் பாகம் ஒரு மணி நேரம் கூடுதலான காட்சிகளுடன் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





