இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசமான முயற்சியையோ அல்லது புதிய தொழில்நுட்பத்தையோ பயன்படுத்துபவர் அவர். அதனால்தான் இன்று சினிமாவில் இருக்கும் இளைய தலைமுறையினர்கூட கமல் ஹாசனுக்கு வெறித்தனமான ரசிகர்களாக இருக்கின்றனர்.
கமல் ஹாசன் சினிமாவில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலரது கவனத்தை பெற்றவர். நாத்திகவாதியான அவர் சொல்லும், சொல்லிய கருத்துக்கள் சர்ச்சையையும் வரவேற்பையும் பெறுபவை, பெற்றவை. முக்கியமாக கமல் திருமண வாழ்க்கைதான் ரொம்பவே விமர்சிக்கப்பட்டது. முதலில் வாணியை திருமணம் செய்துகொண்ட அவர் பிறகு ரேகாவை திருமணம் செய்துகொண்டார்.
இரண்டு திருமணங்களும் பாதியில் முடிவடைந்த சூழலில் தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் தன்னுடன் சேர்ந்து நடித்த கௌதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இந்த ரிலேஷன்ஷிப்பிலிருந்தும் வெளியே வந்தார் கமல். இந்நிலையில் கமல் – கௌதமி பிரிவு எதற்காக நடந்தது என்பது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், “எந்தவிதமான சினிமா பின்புலம் இல்லாத சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் கௌதமி. திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டபோது தெலுங்கு இயக்குநர் ஒருவருடைய கண்ணில் பட்டு சினிமாவில் அறிமுகமானார். ரஜினியுடன் குரு சிஷ்யன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். படம் சூப்பர் ஹிட்டடித்தது.
அதனையடுத்து ரஜினி, ராமராஜன், கமல், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். அதேபோல் கமலுடனும் நடிக்க ஆரம்பித்தார். இப்படி பீக்கில் இருந்தபோதுதான் மார்பக புற்றுநோய் அவருக்கு வந்தது. அதிலிருந்து மீண்ட கௌதமிக்கு மன அழுத்தம் இருந்தது. அப்போது கமல் ஹாசன் பல உதவிகளை செய்தார். இருவரும் ஒரே வீட்டில் இருந்தனர். அப்போது அதுபற்றி வந்த கிசுகிசு, விமர்சனத்தை இருவருமே கண்டுகொள்ளவில்லை.
திடீரென தன்னுடைய மகளின் படிப்புக்காக கமலுடனான ரிலேஷன்ஷிப்பில் இருந்து விலகுகிறேன் என்று நாகரீகமாக ஒரு பதிவை பகிர்ந்து உறவை முறித்துக்கொண்டார். ஆனால் சில ஊடகங்களோ அதற்கு கண், காது, மூக்கு வைத்து எழுதினார்கள்” என்றார்.





