திரையுலகில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும், தனக்கென தனி சாம்ராஜ்யத்தையும் உருவாக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரது திரைப்படம் என்றால் இங்கு டிக்கெட்டுக்கு அலைமோதும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. மாநகரம் திரைப்படத்திலேயே தனது திறமையை நிரூபித்த லோகேஷ் கனகராஜ், விஜய் கமல்ஹாசன் என மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
இதில் அவர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு திரைப்படங்களில் பணியாற்றினார். இது இரண்டுமே கலவையான விமர்சனத்தை கொண்டிருந்தாலும், வசூல் ரீதியாக மிகப் பெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக அவர் மாஸ்டர் திரைப்படத்தில் விஜயை காத்திருந்த விதம் இங்கு பலருக்கும் பிடித்திருந்தது.
இதே கதை தான் லியோவுக்கும். விக்ரம் திரைப்படத்தில் என் சி யூ கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட லோகேஷ் கனகராஜ், லியோ திரைப்படத்திலும் அதை நிச்சயம் வைத்திருப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யவில்லை என்றாலும், வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.
இப்படியான சூழ்நிலையில் தான் தற்போது லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பீரியாடிக் கேங்ஸ்டர் திரைப்படமாக இது உருவாகிறது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வீடியோ வெளியானது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் திரைப்படம் நிச்சயம் தனது கேரியரிலேயே வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார். சோதனை முயற்சியாக இந்த திரைப்படத்தை எடுப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இதன் திரைக்கதையில் மிகவும் மெனக்கெட்டு வருகிறார் இயக்குனர்.
சூட்டிங் இதற்காக காலதாமதம் ஆன நிலையில் தற்போது, ஹைதராபாத்திற்கு படக்குழு சென்றுள்ளது. நடிகர் ரஜினிகாந்தும் இதில் விரைவில் இணைய இருக்கிறார். இதில் சத்யராஜ் நடிப்பது உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு ஒளிப்பதிவராக கிரிஷ் கங்காதரன் செய்யப்படுவார் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே கிரிஷ், தமிழ் சினிமாவில் விக்ரம் மற்றும் சர்கார் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் மூலம் அவர் தேசிய விருதை பெற்றிருந்தார். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்திருக்கிறது.





