நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமாகி 33 ஆண்டுகளாக நடிகராக 69 படங்களில் நடித்தவர். தமிழ் நடிகர்களில் ஹீரோக்களில் ஒரு படத்தில் நடிக்க 250 கோடி ரூபாய் வரை அதிகபட்ச சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் விஜய் மட்டும் தான்.
ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய், அரசியலில் முழுகவனம் செலுத்தப் போகிறேன். ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு பிறகு சினிமாவில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். தனது 69வது படத்தில் நடித்துவிட்டு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டார்.
எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசி படம் 69வது படம் ஜனநாயகன். ஆனால் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகும் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. 5 மாதங்களாக அந்த படம் முடங்கி போயுள்ளது. இன்னும் அந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே வருகிற 22ம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாள் வருகிறது.
அவரது பிறந்த நாளன்று ஜனநாயகன் படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. சென்சார் விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் ஜனநாயகன் படம் ரிலீஸ் என்பது இன்னும் கேள்விக்குறியாக தான் உள்ளது. அதனால் விஜய் நடித்த பழைய சூப்பர் ஹிட் படங்களை ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இயக்குனர் ஆர்டி நேசன் இயக்கத்தில் விஜய் மோகன்லால் காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ஜில்லா படம் வருகிற ஜூன் 19ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. 2014ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படமும் வருகிற ஜூன் 19ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டில் ரிலீஸ் ஆன இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். காஜல் அகர்வால் சமந்தா நித்யாமேனன் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படமும் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக இருந்தது. ஜில்லா மற்றும் மெர்சல் என விஜய் நடித்த 2 படங்களும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரி ரிலீஸ் செய்யப்படுவதால் தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.





