கடந்த சட்டசபை தேர்தல் தவெக தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு தேர்தல் பிரசாரமே செய்ய நேரில் செல்லவில்லை. பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தை அறிவித்து விட்டு பிறகு போலீஸ் அனுமதி மறுப்பதாக கூறி அதை தவெக கட்சி தலைமையே ரத்து செய்து அறிவித்தது. எனினும் 108 இடங்களில் விசிலுக்கு மக்கள் ஆதரவு தந்து விஜயை ஜெயிக்க வைத்தனர்.
ஆனால் இப்போது ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பதை போல, 2 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலுக்காக விஜய் தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளுக்கு மாறி மாறி வந்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மதுராந்தகத்தை நேற்று ரோடு ஷோவை முடித்த விஜய், நாளை தாராபுரத்தில் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு 23 இடங்களில் ரோடு ஷோ நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று மதுராந்தகம் தொகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் மக்கள் கூட்டமே காணப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் காலியான பேரி கார்டுகளுக்கு மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் நின்றிருந்தனர். அவர்களும் கூட விஜயை பார்த்து கையசைக்கவோ ஆர்ப்பரிக்கவோ இல்லை.
அதுமட்டுமின்றி பல இடங்களில் போலீசார் மட்டுமே நின்றிருந்தனர். எனினும் விஜய் கையசைத்தபடி கும்பிட்டபடி வேனில் வந்த நிலையில் அங்கு பதில் வணக்கம் சொல்லவும் கையசைக்கவும் மக்கள் யாருமே இல்லாத நிலையில், தனி ஒருவனாக விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டதை பார்த்து, யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு இவர் டீ போடறார் என்று விவேக் பேசி காமெடி டயலாக்கை பலரும் கமெண்ட் செய்து கலாய்த்தனர்.
இந்த சூழலில் நாளை தாராபுரம் தொகுதியில் விஜய் ரோடு ஷோ நடத்த வருகிறார். கடந்த முறை கோவையில் இருந்து தாராபுரம் வரை பல இடங்களில் பேரிகார்டு வைத்து பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக விஜய் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த முறை கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் விஜய் தாராபுரம் வருகிறார்.
கடந்த முறை தாராபுரத்துக்கு பல மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டி வந்து தவெகவினர் கூட்டம் காட்டி விட்டனர். ஆனால் ரோடு ஷோ காட்ட 50 கிலோ மீட்டர் விஜய் செல்ல இருப்பதால் அப்படி திரண்ட கூட்டத்தை காட்ட வாய்ப்பில்லை. ஏற்கனவே தாராபுரத்தில் தவெகவுக்கு ஆதரவும் வரவேற்பும் இல்லாத நிலையில், நாளை மதுராந்தகத்தை போல தாராபுரத்திலும் ஆள் இல்லாத கடையில் விஜய் டீ ஆத்த போகிறாரா என்று இப்போதே இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்க்க துவங்கி விட்டனர்.





