பல்வேறு காலகட்டங்களில் தொட்டு சாதனை படைத்த தமிழ் சினிமாவில், உச்சம் தொட்ட நகைச்சுவை நடிகர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். நாகேஷில் தொடங்கி கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், கோவை சரளா சூரி என இவர்களின் பட்டியல் செல்கிறது.
இவர்களில் சூரி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் தற்போது கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். இதில் சந்தானத்தின் பெரும்பாலான படங்களில் காமெடி நடிகராக வலம் வருபவர் சேஷு. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சேஷு அறிமுகமானார்.
லொள்ளு சபாவில் தனக்கே உண்டான காமெடி டயலாக் மூலம், அவர் பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதுவும் அவரது உடல் மொழி மிகவும் அருமையாக இருந்ததால் பலரும் சேஷு காமெடியை ரசித்தனர். இங்கிருந்து வெள்ளி திரைக்கும் அவர் அறிமுகமானார்.
குறிப்பாக சந்தானத்தின் பெரும்பாலான திரைப்படங்களில் சேசுவை நம்மால் பார்க்க முடிந்தது. குறிப்பாக ஏ 1 திரைப்படத்தில் கலக்கி இருப்பார் அவர். அச்சச்சோ அவரா பயங்கரமான ஆளாச்சே என்று அவர் கூறிய டயலாக் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
இது மட்டுமல்ல அந்த திரைப்படத்தில் அவர் குடித்துவிட்டு செய்யும் அலப்பறையை இப்போது வரை ரசிகர்கள் பார்த்து பார்த்து சிரிப்பார்கள். இப்படி சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் தனது நடிப்பை அள்ளித் தெளிக்கும் அவர், படம் முழுக்க வருவதில்லை என்ற ஒரு குறை இருந்தது. அதனை வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் தீர்த்து வைத்தார் சந்தானம்.
பூசாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், படம் முழுக்க காமெடி செய்து பட்டையை கிளப்பி இருப்பார். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் பாராட்டையும் பெற்றார். இப்படியான சூழலில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.





