தாராபுரம் தொகுதியில் நேற்று நடந்த திமுக பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார். தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில் அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் கூறியிருக்கிறார். விஜய் கண்டனம் தெரிவித்த இந்த பதிவுக்கு எதிரான பலரும் தங்களது கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அதில், இதே விஜய்தான் பிகில் படத்தில் நடித்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவை குண்டம்மா குண்டம்மா என்று கிண்டல் செய்திருப்பார். அதே போல் சட்டசபையில் மிசா குறித்து பேசும்போது, ஸ்டாலின் தாடையில் அடிபட்டதை நக்கலாக சைகை செய்து விஜய் காட்டினார். இது எல்லாம் உருவக்கேலி இல்லையா? மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி, விஜய்க்கு மட்டும்தான் அது ரத்தமா? என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.





