நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. கடந்த 2025ம் ஆண்டு மே மாதமே தயாரான இந்த படம் கடந்தாண்டு தீபாவளிக்கே வருவதாக தான் இருந்தது. ஆனால் தை பொங்கலுக்கு ஒரு வாரம் வரை தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவித்திருந்தது.
ஆனால் ஜனநாயகன் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சில வசனங்கள் சர்ச்சையாக உள்ளதாக சென்சார் தரப்பில் குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட ரிலீஸ் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகும் இந்த படத்துக்கு இன்னும் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறியும் தாமதமும் நீடிக்கிறது.
இதற்கிடையே நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விரைவில் தமிழக முதல்வராக அரியணை ஏற உள்ளார். இன்னும் 10 தொகுதிகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதால் விரைவில் விஜய் முதல்வராவது உறுதி.
அதனால் நடிகர் விஜய் தனது கடைசி படம் என அறிவித்த ஜனநாயகன் படம் 4 மாதங்களுக்கு பிறகாவது விரைவில் திரைக்கு வரும். அதனால் ரிலீஸ் தேதி இன்று அல்லது நாளைக்கும் அறிவிக்கப்பட்டு விடும் என்று காத்திருந்த தளபதி ரசிகர்களுக்கு இன்னும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில் ஜனநாயகன் ரிலீஸ் குறித்த எந்த அறிகுறியும் இதுவரை தமிழ் சினிமாவில் தெரியவில்லை.
ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டால் வருகிற 21ம் தேதி அல்லது 28ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழு காத்திருக்கிறது. ஆனால் மும்பையில் இருந்து இதற்கான இமெயில் இன்னும் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து சென்னை அலுவலகத்தில் தொடர்பு கொண்டாலும் எந்த தகவலும் இல்லை என்கின்றனர்.
தமிழகத்தின் சரித்திரத்தையே புரட்டும் விதமாக தவெக என்ற கட்சியை துவங்கி 2 ஆண்டுகளே ஆன நிலையில் நடிகர் விஜய் தமிழக முதல்வராக விரைவில் பதவி ஏற்க உள்ளார். அப்படிப்பட்ட ஒரு சூழலில் அவர் நடித்த ஜனநாயகன் படத்தை மட்டும் திரைக்கு வர விடாமல் தடுப்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறதே என்று தளபதி ரசிகர்கள் உச்சக்கட்ட வெறுப்பிலும் அதிருப்தியிலும் இருந்து வருகின்றனர்.





