நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் 14ம் தேதி கூலி படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இது ஒரு பான் இந்தியா படமாக மல்டிபிள் ஸ்டார்ஸ் நடித்த படமாகவும் இருந்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பின் படி முதல் நாள் வசூல் நிலவரம் கூலி படம் உலகம் முழுவதும் மொத்தம் 151 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. நடிகர் விஜய் நடித்த லியோ படம் ரூ. 148 கோடி முதல் நாள் வசூலித்திருந்த நிலையில், ரஜினி படம் அந்த சாதனையை முறியடித்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் 2 படங்களுக்குமே ஒரே இயக்குனர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூலி படத்துக்கு படம் வெளியான முதல் நாள் முதல் காட்சிக்கு பிறகு எதிர்மறையான விமர்சனங்களே அதிகரித்து வருகின்றன. கதை திரைக்கதை சொதப்பல், படம் முழுக்க நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள், சிறந்த நட்சத்திர நடிகர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என பல விமர்சனங்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது எழுந்துள்ளது.
மேலும் வன்முறை மட்டுமே படத்தின் கதைக்களமாக உள்ளது. இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர முடியாத சூழலில், கூலி படம் பெரிய பின்னடவை சந்தித்திருப்பதாக கூறப்பட்டது. படம் பார்த்த ரஜினி ரசிகர்களே, இது நாங்கள் எதிர்பார்த்த படம் அல்ல என்பதை வெளிப்படையாகவே கூற துவங்கியுள்ளனர்.
கூலி படம் முதல் நாளில் மொத்தம் ரூ. 151 கோடி வசூலித்த நிலையில் இந்திய அளவில் முதல் நாள் வசூல் 65 கோடி ரூபாயாகும். 2வது நாளான நேற்று இந்திய அளவில் கூலி படத்தின் மொத்த வசூல் 53 கோடி ரூபாயாகும். 2வது நாளில் உலகளவில் மொத்த வசூல் 80 கோடி ரூபாயாக உள்ளது. ஆக மொத்தம் கூலி படம் 2 நாட்களில் ரூ. 230 கோடி வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடி வசூலை கடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் 2 நாட்களில் ரூ. 118 கோடி வசூலித்துள்ளது.
வெளிநாடுகளில் குறிப்பாக ஆஸ்திரேலியா நார்வே நாடுகளில் அதிக வசூல் செய்த முதல் தமிழ் படமாக கூலி சாதனை செய்திருக்கிறது. யுகே மற்றும் நியூசிலாந்து நாடுகளில் முதல் நாள் வசூலில் கூலி 2ம் இடம் பிடித்துள்ளது. முதலிடம் விஜய் நடித்த லியோ படத்துக்குதான். தமிழ்நாட்டில் வேட்டையன் முதல் நாளில் ரூ. 20 கோடி வசூலான நிலையில், கூலி ரூ. 27 கோடி வசூலித்து முந்தியுள்ளது. அதே நேரத்தில் விஜய் நடித்த தி கோட் ரூ. 31 கோடி, பீஸ்ட் ரூ. 36 கோடி என முதல் நாள் வசூலித்த நிலையில் கூலி தமிழ்நாட்டில் ரூ. 27 கோடி மட்டுமே முதல் நாளில் வசூலித்து பின்தங்கியுள்ளது. விஜய் பட சாதனைகளை முறியடிக்க முடியவில்லை.





