தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படம் கூலி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அதிரடி படமாக உருவாகி உள்ளது.
கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் திரைக்கு வர உள்ள நிலையில், உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கூலி படம் ரிலீஸ் செய்யப்படும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வைக்கும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கூலி படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெளியீட்டுக்கு தயார் செய்து வருவதாகவும், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கூலி படத்தை வெளியிட இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( தி கோட்) படம் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படம் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டது. இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கூலி படம் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் உள்ள படமாகும்.
இதில் நடிகர் ரஜினிகாந்துடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இந்தி நடிகர் அமீர்கான் கன்னட நடிகர் உபேந்திரா மலையாள நடிகர் சவுபின் சாஹிர் மற்றும் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். நடிகர் சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடித்து பல ஆண்டுகள் ஆகிறது. மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகளாக ரஜினிகாந்த் சத்யராஜ் இணைந்து நடிக்கவில்லை.
மிஸ்டர் பாரத் படம் 1986ம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படம். 38 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சத்யராஜ் கூலி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். ரஜினிகாந்த் நடித்துள்ள 171வது படம் கூலி. தங்கக் கடத்தல் கதை பின்னணியில் உருவான படம். கூலி ஒரு தனித்துவமான படமாக இருக்கும். எல்சியு படமாக இருக்காது என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கூலி படம் ரிலீஸாவது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளி உள்ளது.





