நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய நிலையில், கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தினார். இதில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து விஜய்க்கு பலமான ஆதரவை தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய் வயித்துக்கு சோறு, வாழ்வதற்கு வீடு, வருமானத்துக்கு வேலை இதுதான் எங்கள் கட்சியின் அஜண்டா என்று அறிவித்தார், மேலும் ஊழல் செய்து குடும்ப அரசியல் நடத்தி வரும் ஆளுங்கட்சி திமுகதான் என்னுடைய அரசியல் எதிரி என்றும் மாநாட்டில் பகிரங்கமாக பேசினார்.
மேலும் தனது அரசியல் கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகிய 5 பேரை கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இதில் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் எடுத்துக்கொள்வது இல்லை. கடவுளுக்கு எதிரானவர்கள் இல்லை நாங்கள் என்றும் உறுதியளித்தார்.
இந்த சூழலில் நடிகர் விஜய்க்கு எதிரான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். திராவிடமும், தேசியமும் குறித்து விஜய் பேசியது குறித்து குறிப்பிட்டு, எங்கள் கொள்கையில் விஜய் மாறுபட்டு நிற்கிறார் என்று மாநாடு நடந்தவுடன் தங்களது அதிருப்தியை சீமான் வெளிப்படுத்தினார்.
இப்போது தொடர்ந்து விஜய் குறித்து எதிர் விமர்சனங்களை சீமான் முன்வைத்து வருகிறார். அவர் பேசுகையில், சாம்பார் பிடிக்குமுன்னு சொல்லுங்க, இல்லேன்னா கருவாட்டு குழம்பு பிடிக்குமுன்னு சொல்லுங்க, அதென்ன புதுசா கருவாட்டு சாம்பார் பிடிக்குமுன்னு சொல்றீங்க. நான் பேசவில்லை என்றால் வேலு நாச்சியார் யாரென்றே தெரியாது, அஞ்சலை அம்மாள் யாரென்றும் தெரியாது. சேர, சோழன், பாண்டியர்கள் குறித்தும் தெரியாது. தம்பி நீங்க வெச்ச வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் கட் அவுட் நான் வரைஞ்சது தம்பி.
ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் ன்னு எப்பவும் கவட்டையை பிரிச்சுக்கிட்டு நிற்க கூடாது. நான் உரக்கப் பேசுபவன், உண்மையை பேசுபவன். நான் பஞ்ச் டயலாக் பேசுபவன் இல்லை, நெஞ்சில் இருந்து பேசுகிறவன். என் கொள்கையை எதிர்ப்பது யாராக இருந்தாலும், என் தாய் தந்தையாக இருந்தாலும் நிச்சயமாக நான் எதிர்ப்பேன் என்று சீமான் பேசியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





