நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் உலகளவில் மொத்தம் 520 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியானது. ரஜினி நடிப்பில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த 3வது படம் கூலி. ஏற்கனவே ஜெயிலர் மற்றும் 2.0 படங்கள் 500 கோடி ரூபாய் வசூலை கடந்த படங்களாக உள்ளன.
வணிக ரீதியாக கூலி படம் வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கூலி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக ரஜினி நடிப்பு வில்லனாக சௌபிர் சாஹிர் நடிப்பு மற்றும் அனிருத் இசையில் உருவான 2 பாடல்கள், பிஜிஎம் போன்றவை படத்துக்கு நல்ல பலத்தை தந்தன. ஆனால் மற்றபடி கதை திரைக்கதையில் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
குறிப்பாக படம் முழுவதும் லாஜிக் மிஸ்டேக்குகள் நிறைந்து காணப்பட்டன. இந்த படத்தில் நடித்த நட்சத்திர நடிகர்கள் அமீர்கான் உபேந்திரா போன்றவர்கள் வீணடிக்கப்பட்டதாக ரசிகர்கள் விமர்சித்தனர். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் சத்யராஜ் நடித்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டது.
குறிப்பாக ஸ்ருதிஹாசன் கேரக்டர் பல காட்சிகளில், ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தது. வில்லனின் மனைவி ரக்சிதா ராம் என்று தெரிந்தும் அவருடன் காரில் அவர் செல்வது, சத்யராஜின் 3 மகள்களில் ஸ்ருதிஹாசன்தான் தனது மகள் என கண்டுபிடிக்க முடியாமல் ரஜினி திணறுவது போன்ற காட்சிகள் லாஜிக் மிஸ்டேக்குகள் என்பதை விட அபத்தமாக இருந்தன.
இதற்கிடையே கூலி படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்து காணப்பட்டதால் இந்த படத்துக்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியது. அதனால் 18 வயதுக்குட்பட்டவர்கள் யாரும் இந்த படம் பார்க்க தியேட்டர்களில் அனுமதி இல்லை. அதனால் பேமிலி ஃஆடியன்ஸ் வருகையின்றி கூலி படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வருகிற 11ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கூலி படம் வெளியாகிறது. இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில், படத்துக்கு ஏ சான்றிதழ் காரணமாக தியேட்டரில் கூலி படம் பார்க்காத ஃபேமிலி ஆடியன்ஸ், கண்டிப்பாக ஓடிடியில் கூலி படம் பார்ப்பார்கள். அதனால் நல்ல வரவேற்பும் ஆதரவும் ஓடிடியில் கூலி படத்துக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.





