நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான படம் விடாமுயற்சி. இது அஜீத்குமார் நடித்த 62வது படமாகும். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மகிழ் திருமேனி டைரக்ட் செய்திருந்தார். அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜூன் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. எச் வினோத் டைரக்ட் செய்த இந்த படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடித்த படம்தான் விடாமுயற்சி. 2023ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, அஜர்பைஜானில் துவங்கிய படப்பிடிப்பு, அடுத்த 6 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் பல மாதங்கள் தாமதத்துக்கு பின், கடந்த டிசம்பர் மாதம் அஜீத்குமார், திரிஷா நடித்த பாடல் காட்சி என்று தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டது. அதன்பிறகுதான் விடாமுயற்சி படப்பிடிப்பு 100 சதவீதம் நிறைவடைந்தது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்திலும் அஜீத்குமார் நடித்து முடித்திருக்கிறார்.
குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் உள்ளது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் மே 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விடாமுயற்சி படத்துக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம், குட்பேட் அக்லி படத்தின் வியாபாரத்தையும் பாதிக்கும் ஒரு சூழல்தான் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது நிலவுகிறது.
விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை. இதற்கு காரணம் மாஸ் ஹீரோ அஜீத்குமாரை அதற்கேற்ப இந்த படத்தில் பயன்படுத்திக் கொள்ளாமல் மகிழ் திருமேனி பரிசோதனை முயற்சி போல, அவரது இமேஜை டேமேஜ் செய்யும் விதமான கதை, திரைக்கதை காட்சிகளில் நடிக்க வைத்துவிட்டதாக ஏகே ரசிகர்கள் புகார் கூறுகின்றனர்.
அதனால் இன்னும் சில வாரங்களில் விடாமுயற்சி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி விட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி விடாமுயற்சி படம் டிவி சேனலில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்ற அறிவிப்புடன் வெளியாகவும் அதிக வாய்ப்புள்ளது. விடாமுயற்சி படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளது. அதனால் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் விடாமுயற்சி சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.





