இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த் காம்போவில் உருவான படம் என்பதால் மிகவும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14ம் தேதி கூலி படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும் சத்யராஜ் உபேந்திரா நாகர்ஜூனா ஸ்ருதிஹாசன் சௌபின் சாஹிர் அமீர்கான் ரக்சிதா ராம் என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
கைதி விக்ரம் போன்ற மாஸ் ஹிட் படங்களை தந்த இயக்குனர் என்பதால் லோகேஷ் கனகராஜின் அதிரடியான படமாக இது இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மொக்கையான ஒரு கதைக்களத்தில் படம் முழுவதும் லாஜிக் ஓட்டைகளுடன் கதை திரைக்கதையில் எந்த கவனமும் இன்றி இந்த படத்தை அவர் இயக்கியிருப்பதாக ரசிகர்களிடையே கடும் விமர்சனம் எழுந்தது.
இந்த படத்தில் 74 வயதிலும் ரஜினியின் சுறுசுறுப்பான நடிப்பு, மலையாள சௌபிர் சாஹிரின் மிரட்டலான வில்லத்தனம், சில காட்சிகள் என்றாலும் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்திய ரக்சிதா ராம் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தந்த 2 பாடல்கள் என இந்த 4 விஷயங்கள் மட்டுமே படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தின.
மற்றபடி கூலி படத்தில் ரத்தம் கொப்பளிக்கும் வன்முறை காட்சிகள் மிக அதிகம்; அதுவும் எலக்ட்ரிக் சேர் போன்ற விஷயம் எல்லாம் பழைய எம்ஜிஆர் படங்களிலேயே ரசிகர்கள் பார்த்ததுதான். சத்யராஜூக்கு நடிக்க வாய்ப்பே இல்லை. அமீர்கான் உபேந்திரா போன்றவர்கள் வீணடிக்கப்பட்ட நிலையில், நாகர்ஜூனா நடிப்பும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவே இல்லை என்பதுதான் பச்சையான உண்மை.
இதற்கிடையே வேண்டும் என்றே கூலி படம் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்படுவதாக, ஒரு சிலர் வேண்டும் என்றே பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். படத்தில் நடித்த ரஜினியே கூலி படத்தை இப்போது விரும்பியிருக்க மாட்டார் என்பதே உண்மை. இந்நிலையில் கூலி படம் இதுவரை 450 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கூலி 500 கோடி ரூபாய் வசூலை எட்டுவதே பெரும்பாடாக உள்ளது. இதற்கிடையே ஃபேமிலி ஆடியன்ஸை தியேட்டர்களுக்குள் கொண்டு வர யு/ஏ சான்று கேட்டு சன்பிக்சர்ஸ் போராடி வருகிறது. இதற்கிடையே வருகிற செப்டம்பர் 12 அல்லது 13ம் தேதி கூலி படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது.





