தமிழ் சினிமாவில் நயன்தாரா நடித்த அறம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இந்த படத்தில் கலெக்டர் கேரக்டரில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்தார். நயன்தாரா பல படங்களில் கதையின் நாயகியாக இந்த படமே அடித்தளமாக இருந்தது.
ஆழ்குழாய் கிணறு தோண்டிய ஆழமான குழிக்குள் தவறி விழும் குழந்தைகளைப் பற்றிய கதைக்களத்தில் அறம் படம் உருவாகி இருந்தது. அறம் படத்தை தொடர்ந்து இயக்குனர் கோபி நயினார் மனுஷி என்ற அடுத்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் சொந்தமாக தயாரித்திருக்கிறார்.
அறம் படத்தைப் போலவே மனுசி படமும் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு முக்கிய கதையாக உருவாகி இருக்கிறது. இதில் நாயகியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார். இளையராஜா இசையில் மனுசி படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி கடந்தாண்டு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர் நாசர் தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அறம் படத்தைப் போலவே மனுஷி படமும் சமூக பிரச்னைகளை பேசும் கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக டிரெய்லர் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் மனுஷி படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கைகளை குழப்பும் வகையில் படத்தில் காட்சிகள் இருப்பதாகவும் கூறி தணிக்கைச் சான்று வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்தார். அதில் நிபுணர் குழு அமைத்து மனுசி படத்தை மீண்டும் தணிக்கை செய்யக்கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட கோரியும், படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
மேலும் பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சியை எடிட் செய்யத் தயார் என்றும் படத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்றும் இயக்குனர் வெற்றிமாறன் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மனுசி படத்தை மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்யப்படும். படத்தில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு பதில் அளித்து அதை உறுதி செய்துள்ளது.





