- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பாடலை இளையராஜா உரிமை கொண்டாட முடியாது; அகத்தியா படம் பாடல் விவகாரத்தில் டில்லி உயர்நீதிமன்றம்...

அந்த பாடலை இளையராஜா உரிமை கொண்டாட முடியாது; அகத்தியா படம் பாடல் விவகாரத்தில் டில்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானியாக கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவர் கடந்த 47 ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். இன்றும் பல படங்களுக்கு பிஸியாக இசை அமைத்துக் கொண்டிருக்கும் முன்னணி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் இசைஞானி இருந்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக, நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் எனக்கு மட்டுமே சொந்தம் என்று இளையராஜா உரிமை கொண்டாடி வருகிறார். அவர் இசையமைத்த பாடல்களை, பின்னணி இசையை சமீப காலங்களில் பலரும் தங்களது படங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இளையராஜா, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வது வழக்கமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இப்போது பா விஜய் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஜீவா ராஷி கண்ணா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அகத்தியா. இந்த படம் வருகிற 28ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான மூடுபனி என்ற படத்தில் இடம்பெற்ற என் இனிய பொன் நிலாவே என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர்.

அந்தப் பாடலின் உரிமை தங்களிடம் உள்ளது. அனுமதி இல்லாமல் அந்த பாடலை அகத்தியா படத்தில் பயன்படுத்தி இருப்பதாக ஸரிகம ஆடியோ நிறுவனம் அகத்தியா பட தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த விசாரணையின் முடிவில் அந்தப் பாடலை அகத்தியா படத்தில் பயன்படுத்த நீதிமன்றத்தில் 30 லட்சம் ரூபாய் செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த பாடலுக்கான உரிமை ஸரிகம நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. அதன் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இல்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அகத்தியா பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், அந்த பாடலுக்கான உரிமையை ஒரிஜினல் இசையமைப்பாளரான இளையராஜாவிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இரு தரப்பு ஆதாரங்களையும் ஆராய்ந்த கோர்ட் தற்போது என் இனிய பொன் நிலாவே பாடலை இளையராஜா உரிமை கொண்டாட முடியாது என்ற அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் இளையராஜாவின் பாடல்களை ஆடியோ நிறுவனங்கள் உரிமை வாங்கியிருந்தால் அவர் உரிமை கொண்டாட முடியாதா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்