தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகர்கள், நடிகைகளின் பெயரை தாண்டி அவர்களது பட்டப் பெயர்கள் நிலைத்து விடுகின்றன. ஆனால் அது தேவையில்லாதது என்ற பக்குவம் மிக்க சில நடிகர்கள், அதை தவிர்த்து விடுகின்றனர். சிலர் அதை உடும்பு பிடியாக பிடித்துக்கொள்கின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜீத்குமார் தன்னை அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்க வேண்டாம் என பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனும் இனி என்னை உலக நாயகன், கலைஞானி என்றெல்லாம் அழைக்க வேண்டாம். கமல் அல்லது கமல்ஹாசன் என்று அழைத்தால் போதும் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதற்கிடையே நடிகை நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என அடைமொழியால் குறிப்பிடுகின்றனர். முதலில் தெலுங்கு நடிகை விஜயசாந்திக்குதான் அந்த படம் இருந்தது. பிறகு அது எப்படியோ நயன்தாராவுக்கு மாறி வந்துவிட்டது. ஆனால் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பேசும் போது, இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே தனக்கு பிடிக்காது, வேண்டாம் என்று சொன்னாலும் அதை டைட்டிலில் கொண்டு வந்து விடுகின்றனர் என்று கூறி வருகிறார்.
ஆனால் நயன்தாரா நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் விளம்பர போஸ்டர்களிலும், படம் குறித்த அறிவிப்புகளிலும், படத்தில் வரும் டைட்டில் கார்டிலும் தவறாமல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அது எப்படி நயன்தாராவே மறுத்தும் இப்படி கட்டாயமாக இப்படி அவரது பெயருக்கு முன்னால் இந்த பட்டம் இடம்பெறுகிறது என்பதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி, வீடியோ ஒன்றில் கூறியதாவது, நடிகை நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி அக்ரிமென்டில் கையெழுத்து போடும் போதே, படம் சம்பந்தப்பட்ட அனைத்து அறிவிப்புகளிலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இடம்பெற வேண்டும் என்பது கட்டாய விதிமுறையாக உள்ளது. அப்படி இருந்தால்தான் அவர் படத்தில் நடிக்கவே கமிட் ஆகிறார்.
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா நடித்த போது, ரஜினிக்கு மட்டுமே சூப்பர் ஸ்டார் என டைட்டிலில் போடப்படும். நயன்தாராவுக்கு போட முடியாது என சன்பிக்சர்ஸ் நிறுவனம் மறுத்த நிலையில், படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவை, நயன்தாரா தரப்பு அதிக தொல்லை செய்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சிவாவே, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசி லேடி சூப்பர் ஸ்டார் என போட்டுவிடுங்கள், இல்லாவிட்டால் என்னால் வேலையே பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு நயன்தாரா, அந்த பட்டத்தை விரும்புகிறார் என்பதே உண்மை என கூறியிருக்கிறார்.





