நேற்று முன்தினம் தமிழக அரசு சார்பில் சிறந்த திரைப்படங்கள் சிறந்த நடிகர்கள் நடிகைகள் குறித்த பட்டியலுடன் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒட்டுமொத்தமாக 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் திரைப்பட விருதுகள் விழாவை நடத்தியிருந்தால் இப்படி ஒட்டுமொத்தமாக 7 ஆண்டுகளுக்கான விருது விழாவை ஒரே நாளில் நடத்தும் சூழல் ஏற்பட்டிருக்காது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்திருப்பதும் கவனிக்கதக்கது.
ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள திரைப்பட விருதுகளில் அஜீத்குமார் விஜய் படங்கள் கவனமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. ரசிகர்களால் மிக நல்ல படங்கள் என்று கொண்டாடப்பட்ட பல படங்கள் இதில் காணாமல் போயுள்ளன. மேலும் திமுக ஆதரவாளர்களுக்கு மறைமுகமாக ஆதரவு செய்யும் வகையில் இந்த விருதுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார் தமிழக அரசின் திரைப்பட விருது குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குனர் விருதை எனக்கு அறிவித்து இருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டு இருப்பேன்.
உலகம் முழுவதும் முதலாளித்துவத்தை பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தனது சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாக பிரிக்கும். உரிமை கோருபவர்களை தன் அரசுக்கு எதிரானவர்களாகவும் தன்னிடம் சமரசம் ஆகிறவர்களை அவ்வப்போது பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தும் போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும்.
இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது என்று அந்த பதிவில் இயக்குனர் நயினார் கோபி குறிப்பிட்டுள்ளார். அவர் இயக்கிய அறம் படம் தமிழக அரசின் திரைப்பட விருதில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் சிறந்த இயக்குனர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்பதால் இந்த பதிவை அவர் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.





