தமிழ் சினிமாவில் ஜாதியை விமர்சித்தோ அல்லது சில ஜாதிகளை தூக்கிப் பிடித்தோ பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அத்திரைப்படங்களின் கருத்துக்களோ உள்ளடக்கங்களோ சில ஆடியன்ஸ்களுக்கு சரியாக சென்று சேர்கின்றனவா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சந்தேகம்தான் “மாமன்னன்” திரைப்படத்திற்கு எழுந்திருக்கிறது.

“மாமன்னன்” திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளிவந்தது. திரையரங்குகளில் பார்க்காத பலரும் ஓடிடியில் வெளிவந்தபிறகு பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஆதலால் மீண்டும் “மாமன்னன்” படத்தை குறித்தான விவாதங்களும் விவகாரங்களும் இணையத்தில் எழுந்து வருகிறது.
மாரி செல்வராஜ் எப்போதும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கதையம்சமாக வைத்தே தனது திரைப்படங்களை உருவாக்குவார். அதே போல்தான் “மாமன்னன்” திரைப்படத்தையும் உருவாக்கியிருந்தார். ஆனால் இப்போது நிலைமையே வேறு ஒன்றாக இருக்கிறது.

அதாவது இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவையும் அதிவீரனாக நடித்த உதயநிதி ஸ்டாலின் கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால் இப்போது ஓடிடியில் வெளியான பிறகு வில்லன் கதாபாத்திரமான பகத் பாசிலின் ரத்னவேலு கதாபாத்திரம் வைரல் ஆகி வருகிறது.
ரத்னவேலு கதாபாத்திரம் ஒரு ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்றே வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் மிகவும் வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் பகத் பாசில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அவர் இவ்வாறு சிறப்பாக நடித்ததும் அந்த கதாபாத்திரத்தை மாரி செல்வராஜ் மிகவும் வில்லத்தனமாக செதுக்கியதும்தான் தற்போது வினையாகி உள்ளது.
ரத்னவேலுவின் கதாபாத்திரத்தை இணையத்தில் பல ஜாதி சார்ந்த குரூப்புகள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் வெளியான பல மாஸ் ஆன பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு பகத் பாசில் இடம்பெற்ற காட்சிகளை இணைத்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளுமே பகத் பாசிலின் கதாபாத்திரத்தை அவரவர்களின் சாதியை சார்ந்த கதாபாத்திரமாக கொண்டாடி வருகின்றனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

“மாமன்னன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் “தேவர் மகன்” திரைப்படத்தை குறித்து மாரி செல்வராஜ் விமர்சித்து பேசியதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இப்போது கதை வேறு மாதிரியாக ஆகியிருக்கிறது. அதாவது “மாமன்னன்” படத்தின் நாயக பிம்பத்தை விட்டுவிட்டு அதிகாரத்தின் குறியீடான வில்லனின் பிம்பத்தை கொண்டாடி வருகின்றனர். இது எங்கே போய் முடியப்போகிறதோ? என்று பலரும் வேதனையில் இருக்கிறார்கள்.





