தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்கள் என்பது அரிதாகி விட்டன. எப்போதாவது சமூக நிகழ்வுகளை மையப்படுத்திய நல்ல கதைகள் படங்களாக வெளியாகின்றன. ஆனால் அவை குறிஞ்சிப்பூ போல மிக அரிதாகவே தமிழ் சினிமாவில் நடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் வன்முறை ஆக்சன் படங்கள்தான் பெரிய அளவில் ஜெயிக்கின்றன.
மாநகரம் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே நல்ல அடையாளத்தை அவருக்கு கொடுத்தது. குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் யாரிடமும் உதவி இயக்குனராக தொழில் கற்காமல் நேரடியாக இயக்குனராக களத்தில் இறங்கியவர்.
ஆனால் முதல் படத்திலேயே ஜெயித்துக் காட்டினார். அதன்பிறகு கார்த்தி நடித்த கைதி படமும் கமல் நடித்த விக்ரம் படமும் லோகேஷ் கனகராஜூக்கு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை பெற்றுத் தந்தது. விஜய் நடித்த மாஸ்டர் லியோ படங்களும் ரஜினி நடித்த கூலி படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் கமல் மகள் ஸ்ருதிஹாசன் இயக்கிய இசை ஆல்பம் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். அதுவும் நல்ல கவனத்தை பெற்றது. தொடர்ந்து கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்தார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்தது.
கடந்த 7ம் தேதி ரிலீஸான இந்த படம் முதல் நாளில் 5.25 கோடி ரூபாய் வசூலை செய்தது. ஆனால் 4வது நாளில் ரூ. 50 கோடி வசூலை கடந்தது. படம் முழுவதும் வன்முறை சண்டை காட்சிகள் துப்பாக்கி சத்தம் ரத்தம் வெட்டு குத்து என இருந்தாலும் இதுபோன்ற படங்களையும் ஒரு தரப்பு ரசிகர்கள் விரும்பி ரசிக்கவே செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டிசி படம் ரூ. 100 கோடி வசூலை கடந்துவிட்டதாக டிசி படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே தனது முதல் படம் மாநகரம் படத்தில் இயக்குனராக ஜெயித்த லோகேஷ் கனகராஜ் ஹீரோவான முதல் படம் டிசி படத்திலும் ஜெயித்து விட்டார். விரைவில் டிசி படம் 2ம் பாகமாக உருவாகும் என்றும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





