தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் தேவா பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்வர். கடந்த 1990 காலகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர். வைகாசி பொறந்தாச்சு சூரியன் அண்ணாமலை பாட்ஷா அவ்வை சண்முகி என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் தேவா தான். இளையராஜா போலவே அவரும் இசை ரசிகர்களால் அப்போது கொண்டாடப்பட்டவர்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு புதிய இசையமைப்பாளர்கள் வருகை அதிகரித்ததால் தேவாவுக்கு தமிழ் சினிமாவில் இசை வாய்ப்பு குறைந்தது. அதே நேரத்தில் அவர் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்து பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்து விட்டார். மேலும் கானா பாடல்களுக்கு தேவா தான் என்ற புகழும் அவருக்கு கிடைத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இசையமைப்பாளர் தேவா, இசை நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் அவரது இசை கச்சேரிகளுக்கு பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. அடுத்ததாக இலங்கை நாட்டில் கொழும்புவில் தேவாவின் இசை நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது இசையமைப்பாளர் தேவா கூறியதாவது மீசைய முறுக்கு 2 படத்தில் என்னை தாதாவாக நடித்த கேட்டார்கள். அந்த படத்தின் கதை மிக அற்புதமாக இருந்தது. ஆனால் அதில் நான் நடிக்கவில்லை. அதற்கான காரணத்தையும் நான் கூறினேன். இப்போது இசை நிகழ்ச்சிகளில் நான் பிஸியாக இருக்கிறேன்.
சென்னை பாரிஸ் ஜப்பான் என அடுத்தடுத்து பல இடங்களுக்கு நான் சென்று வருகிறேன். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு என்னால் சரியான ஒத்துழைப்பு தர முடியாது. குறிப்பிட்ட நாட்களில் நேரத்துக்கு என்னால் படப்பிடிப்புக்கு செல்ல இயலாது. மேலும் நான் நடிக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. எனக்கு நடிக்க தெரியாது. வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்து பேச வேண்டும்.
ஆனால் நான் வசனங்களை எல்லாம் மறந்து விடுவேன். அதனால் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார். எனக்கு நடிக்க தெரியாது என்று சொன்னது மட்டும் இன்றி ஸ்கூல் ஸ்டூடண்ட் போல வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்து பேச தெரியாது, நான் மறந்து விடுவேன் என்று அவர் யதார்த்தமாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





