கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர் தேனிசை தென்றல் தேவா. நடிகர் பிரசாத் நடிகராக அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடினார். தொடர்ந்து தமிழில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர்.
தேவா இசையமைத்த அண்ணாமலை நம்ம ஊரு பூவாத்தா வசந்தகால பறவை சூரியன் தெற்கு தெரு மச்சான் கட்டபொம்மன் சோலையம்மா என் ஆசை மச்சான் ஆசை அவ்வை சண்முகி பாஞ்சாலங்குறிச்சி என பல படங்களுக்கு இசையமைத்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். அவரே பல கானா பாடல்களை சொந்த குரலிலும் பாடி ரசிகர்களை அசத்தியவர்.
இந்நிலையில் இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் 1992ம் ஆண்டில் வெளியான படம் சூரியன். இந்த படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். நாயகியாக ரோஜா நடித்திருந்தார். காமெடி ரோலில் போலி அரசியல்வாதி கேரக்டரில் கவுண்டமணி நடித்திருந்தார். அவரது காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
மனோரமா கேரக்டரும் முக்கியமானதாக இருந்தது. வில்லனாக பாபு ஆண்டனி மிரட்டலாக நடித்திருப்பார். இந்த படத்துக்கு இசைமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சூரியன் படத்தில் கேரக்டருக்காக நடிகர் சரத்குமார் மொட்டையடித்துக்கொண்டு நடித்தது பெரிய விஷயமாக பேசப்பட்டது.
நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் தேவா சூரியன் படம் குறித்து கூறியதாவது, இந்த படத்தில் ஒரு காட்சியில், சரத்குமார், ரோஜா இருவரும் திருமணம் செய்துக்கொள்வர். அப்போது முதலிரவு காட்சியில், என்னய்யா வீட்டுக்கு வெளியே திண்ணையில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் பாட்டு கேட்குறே, உள்ளே வா, நானே பாடறேன் என சரத்குமாரை, ரோஜா அழைப்பது போன்ற காட்சி இருந்தது.
அந்த வசன காட்சிக்கு ஏற்ப, கந்த சஷ்டி பக்தி பாடல் மெட்டில், 18 வயசு இளமொட்டு வயசு ஏங்குது பாய் போட என்ற பாடலை இசையமைத்து கொடுத்தேன். ஆனால் சூரியன் படம் வெளியான போது, படத்தின் நீளம் அதிகம் என, சரத்குமாரிடம் ரோஜா பேசும் அந்த 2 நிமிட காட்சியை நீக்கி விட்டு அந்த பாடல் காட்சி மட்டுமே படத்தில் வந்தது. அதனால் கந்த சஷ்டி பக்தி பாடல் மெட்டில் நான் இசையமைத்ததாக பலரும் என்னை திட்டினர். அதனால் என் மரியாதையே போய்விட்டது என அந்த நேர்காணலில் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார் தேவா.





