சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளராக பங்கேற்றவர் ஜனனி ஐயர். அவன் இவன், தெகிடி உள்ளிட்ட படங்களில் ஜனனி ஐயர் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஓரளவுக்கு அவருக்கு மேலும் பப்ளிசிடியை அதிகப்படுத்தி தந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டால், சினிமாவில் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஆசையில், ஆர்வத்தில்தான் விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ்சில் பலரும் பங்கேற்கின்றனர். குறிப்பாக வளரும் நடிகர், நடிகையர், மாடலிங் செய்வோர் தாங்கள் செலிபரட்டி ஆக ஆசைப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
ஆனால் இதில் பல போட்டியாளர்களுக்கு கிடைப்பது பலத்த ஏமாற்றம்தான். அந்த சீசனில் நடிப்பவர்கள், அந்த சீசனோடு மறக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. பிக்பாஸ் செலிபரட்டி என்பதற்காக யாருக்குமே சினிமாத்துறையில் முன்னணி இடமோ, முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
அதனால் சில ஆண்டுகளாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்க முன்வருவதில்லை. சொந்த காசில் சூனியம் வைப்பது போல, வலுக்கட்டாயமாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று, தங்களது இமேஜை டேமேஜ் செய்துக்கொள்ள யாருமே முன்வருவதில்லை. பணம் தேவை என்ற நிலையில் இருப்பவர்களே இதற்கு தைரியமாக முன்வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு ஜனனி ஐயர் வந்திருந்தார். அவரை சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது பிக்பாஸ்சில் பங்கேற்ற பிறகு, சினிமாவில் உங்களை பார்க்கவே முடியவில்லையே என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு டென்சனாகி பதிலளித்த ஜனனி ஐயர், இப்போது கௌதம் கார்த்திக் படத்தில் நடித்திருக்கிறேன். முன்பு போலவே, படங்களில் நடிக்கிறேன். அதை யாரிடமும் நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிக்பாஸ் ஷோவை நான் பார்ப்பது இல்லை. அவ்வளவு பிசியாக இருக்கறீங்களா என திட்டுவார்கள். எனக்கு பிக்பாஸ் பார்க்க விருப்பமில்லை. அதனால் பார்ப்பதில்லை என்று கூறியிருக்கிறார் ஜனனி ஐயர்.





