தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியானது. வெங்கி அட்லூரி இயக்கியிருந்த அந்த படத்தின் மூலம் தெலுங்கில் தனது மார்க்கெட்டை நிலை நிறுத்தலாம் என தனுஷ் நினைத்திருந்தார். ஆனால் அவரது நினைப்பு வாத்தி ரிசல்ட்டால் அடிபட்டு போனது. அந்தப் படம் தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்ற குழப்பம் படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு இருந்ததால் படம் படுதோல்வியை சந்தித்தது.
இதனை அடுத்து ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்த கமிட்டானார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பீரியட் படமாக இந்த படம் உருவாகிறது
படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து படத்துக்கு சில சிக்கல்கள் ஆரம்பித்தன. தென்காசி பகுதியில் எந்தவித முன் அனுமதியும் இன்றி படப்பிடிப்பு நடத்தியது; மேலும் குண்டுவெடிப்பு காட்சிகளை ஷூட் செய்ததால் படத்தின் சூட்டிங் நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர் ரத்து செய்தது என சிக்கல்கள் நீடித்தன. பிறகு ஒரு வழியாக ஷூட்டிங் தென்காசி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது.
படத்தின் டீசரானது தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. டீசரை பார்த்து ரசிகர்கள் நிச்சயம் படம் மெகா ஹிட் அடிக்கும் என்றும் அருண் மாதேஸ்வரனின் மேக்கிங் அபாரமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்துவந்தனர்.
படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன படமானது டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அருண் மாதேஸ்வரன் தனுஷ் கூட்டணி மீண்டும் இணைவதாக கூறப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரனின் வொர்க் ஸ்டைல் மிகவும் பிடித்து போனதால் தனுஷ் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.
We are elated to sign the visionary @ArunMatheswaran for our next venture, starring @dhanushkraja #WunderbarFilms #Dhanush pic.twitter.com/s65u5x1mge
— Wunderbar Films (@wunderbarfilms) August 20, 2023
தற்போது தனுஷ் அவரின் ஐம்பதாவது பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதனை எடுத்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் ஒரு படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் அவர் கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.





