அஜித் குமாரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு அந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இருப்பினும் இரண்டாம் பாதியில் திரைக்கதை அந்த அளவு விறுவிறுப்பாக இல்லாததால், விடாமுயற்சி திரைப்படம் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் அடுத்ததாக அஜித்குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. திரிஷா அர்ஜுன் தாஸ் பிரசன்னா தெலுங்கு நடிகர் சுனில் குமார் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார்.
அண்மையில் குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து வெளியான டீசர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. சொல்லப்போனால் டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள், பல லட்சம் பார்வைகளைப் பெற்று சாதனை புரிந்தது. தற்போது அந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதேசமயம் அஜித் குமாரின் அடுத்த திரைப்படம் குறித்த சஸ்பென்ஸ் நீடித்துக்கொண்டே இருக்கிறது.
தற்போது அஜித் குமார் கார் பந்தயத்தில் பிஸியாக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட அவர் அக்டோபர் மாதம் வரை ரேசில் தான் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் படங்களில் மீண்டும் நடிக்க கவனம் செலுத்த இருக்கிறார். ஆனால் இந்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது தான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
இந்தப் பட்டியலில் ஏராளமான இயக்குனர்கள் இணைந்து இருக்கிறார்கள். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணுவர்தன், அஜித் குமாரை வைத்து இயக்கும் திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறினார். இந்தப் பட்டியலில் வெங்கட் பிரபு சிறுத்தை சிவா கார்த்திக் சுப்பராஜ் மகாராஜா திரைப்படத்தை எடுத்த நித்திலன் சுவாமிநாதன் போர் தொழில் படத்தை எடுத்த விக்னேஷ் ராஜா உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.
ஆனால் தற்போது இந்த ரேஸில் தனுஷ் முந்தி இருப்பதாக ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. அவர் அஜித்தை வைத்து படம் இயக்கப் போவதாகவும் இதனை அவரின் வண்டர்பார் நிறுவனமே தயாரிக்க உள்ளது என்றும் பேசுகிறார்கள். அனிருத் படத்திற்கு இசையமைக்க இருக்கிறாராம். குட் பேட் அக்லியுடன் தனுஷின் இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று தகவல் வெளியாகி இருக்கும் சூழலில்தான் இப்படி ஒரு செய்தியும் உலா வருகிறது.





