நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்தை நெருங்கி இருக்கிறார். இதற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி நடித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையில் இதன் பாடல்கள் உருவாகியுள்ளன.
குறிப்பிட்ட இடைவெளியில் இதற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் தனுஷ். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இதற்காக பிரம்மாண்ட செட் போடப்பட்டு அதற்கான பணிகள் முடிக்கப்பட்டன. வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக மொட்டை கெட்டப்பில் தனுஷ் காட்சியளிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக சந்தீப் கிஷன், காளிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சகோதரியாக துஷாரா விஜயன் வருகிறார். படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டுகிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதில் கடைசியாக பாட்ஷா பட ரெஃபரென்ஸை தனுஷ் வைத்திருந்தார்.
இதில் தனுஷின் அண்ணன் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன் ஆகியோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், அதற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தனுஷ் நிறைய விஷயங்களை பகிர்ந்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
என்னுடைய தவறுகளுக்கு எல்லாம் நான் நன்றி கூற விரும்புகிறேன். இப்போது என்னுடைய ஒரு mashup வீடியோ இங்கு திரையிடப்பட்டது. அதில் என்னுடைய அனைத்து தவறுகளையும் நான் பார்த்தேன். இத்தனை வருடங்களாக மக்கள் என்னை எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எப்படி இந்த அற்பத்தனத்தை தாங்கி கொண்டார்கள் என்றும் நினைக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் நான் எனது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால் அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த திரைப்படம் குறித்து தைரியமாக இருப்பது தான் எனக்கு பதட்டத்தை கொடுக்கிறது. ஐம்பதாவது படம் என்றெல்லாம் இல்லை, எல்லோருக்கும் விரும்பும் வகையிலான ஒரு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று தெரிவித்தார். அப்போது காளிதாஸ் தனுஷிடம், ராயன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் நடிக்க வில்லை என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சற்றும் யோசிக்காமல் ரஜினிகாந்த் சார் என்று பதிலளித்தார் தனுஷ். இதேபோல் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உடன் நடிப்பதற்கு விருப்பம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





