சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய படம் ராயன். இந்த படம் கடந்த மாதம் 26ம் தேதி வெளியானது. இது நடிகர் தனுஷ் நடித்த 50வது படம், அவர் இயக்கிய 2வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், தனுஷூக்கு ஜோடி இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
ராயன் படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சரவணன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில், வன்முறை காட்சிகள் அதிகம் என, முதலில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அந்த விமர்சனம் கடந்தும் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
படம் முழுக்க குத்தூசியால் ஏகப்பட்ட கொலைகளை செய்கிறார் நடிகர் தனுஷ், படம் முழுக்க இருட்டிலேயே நடக்கிறது. இந்த படத்தில் காமெடி காட்சிகளே இல்லை. உடன்பிறந்த தம்பிகளே அண்ணனை கத்தியால் குத்துவது போன்ற காட்சிகள் எல்லாம் உறவுகளுக்குள் இருக்கும் இணக்கத்தையே சிதைக்கிறது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் அதை எல்லாம் கடந்தும், ராயன் படத்தை ரசிகர்கள் வரவேற்றனர். அதற்கு மிக முக்கியமாக ஏஆர் ரகுமான் இசை படத்தை தூக்கிப் பிடித்தது. குறிப்பாக அடங்காத அசுரன்தான் பாடல் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வைப்பை ஏற்படுத்தியது. படத்தின் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.
இந்நிலையில், கடந்த 13 நாட்களில் ராயன் படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்திருக்கிறது. படம் ரிலீஸ் ஆன 7 நாட்களில், 100 கோடி வசூல் என்ற சாதனையை ராயன் புரிந்தது. இதுவரை தனுஷ் நடித்த படங்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த முதல் படம் ராயன் என்பதும் கவனிக்கத்தக்கது.
இதுவரை 13 நாட்களில் ராயன் படம், உலகளவில் 134 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.
பாக்ஸ் ஆபீஸில் படம் வெளியான 13 நாட்களில் 134 கோடி ரூபாய், பெரிய சாதனையாக ராயன் படம் புரிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 70 கோடி ரூபாய் ராயன் படம் வசூலித்துள்ளது. இன்னும் ராயன் படத்துக்கு ரசிகர்களின் கூட்டம் குறையவில்லை. குறிப்பாக ரிபீட் ஆடியன்ஸ் வருகை அதிகரித்திருப்பதும் ராயன் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.





