சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் அவரது முதல் திரைப்படமான துரோகி, வந்த தடம் தெரியாமல் மறைந்து போனது. இதனால் ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட அவர், இறுதிச்சுற்று திரைப்படத்தை கொடுத்து வெற்றி பெற்றார்.
குத்துச்சண்டையை மையப்படுத்தி அதில் காதலையும் தூவி, மிகச் சரியான காட்சி அமைப்புகளை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தார் சுதா. இதற்கு பிறகு சூர்யாவுடன் இணைத்து அவர் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்குகிறார். இந்தத் திரைப்படம் சுதாவுக்கு மட்டுமல்லாமல் சூர்யாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
தேசிய விருதை இந்த திரைப்படம் தட்டிச் செல்ல, சூர்யா கைகளுக்கும் சிறந்த நடிகருக்கான விருது வந்து விழுந்தது. இதன் பிறகு அவர் மீண்டும் சூர்யாவுடன் தான் இணைவதாக இருந்தது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. புறநானூறு என டைட்டில் சொல்லப்பட, அதில் நஸ்ரியா துல்கர் சல்மான் விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென இதன் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. எதுவுமே நடக்காதது போல சூர்யா தனது அடுத்த திரைப்படத்துக்காக வேலைகளில் இறங்கினார். தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். எதற்காக புறநானூறு திரைப்படம் தள்ளிப்போனது என்று இதுவரை கூறப்படவில்லை. ஒருவேளை, அமீர் – ஞானவேல் ராஜா பிரச்சனை தொடர்பாக சுதா பேசியது இதற்கு காரணமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
இதனிடையே சுதா கொங்கரா அடுத்ததாக, சிவகார்த்திகேயனுடன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அவர் சூரரைப் போற்று திரைப்படத்தை, ஹிந்தியில் ரீமேக் செய்த நிலையில் அந்தப் படம் தற்போது சர்பாரியா என்னும் பெயரில் வெளியாகி உள்ளது. இதில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க சூர்யா தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் அது குறித்து பேசிய சுதா, மணிரத்னத்துடன் உதவியாளராக பணிபுரிந்த நாட்களையும் நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, ஆயுத எழுத்து திரைப்படத்தில் பணிபுரியும் போது, முதல் காட்சியில் சூர்யா ஒரு வசனம் பேச வேண்டி இருந்தது. இதற்காக சுவற்றில் முன்பு நின்று கொண்டு தனது காட்சிக்கு அவர் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இதன் பிறகு, காட்சி எடுக்கப்படும் போது அவர் மீண்டும் மீண்டும் டேக் வாங்கிக் கொண்டே இருந்தார். மணிரத்னமே இந்த காட்சி போதும் என்று கூறிய போதும், தனக்கு அது திருப்தியை தரவில்லை என்று கூறி மீண்டும் மீண்டும் சூர்யா நடித்தார். அது 26 டேக் வரை சென்றது என்று கூறியிருக்கிறார்.





