தனுஷ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இளைஞர்களின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த காவியம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, தனுஷிற்கு வெளியானது குபேரா திரைப்படம். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இதனை இயக்கியிருந்தார்.
நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தெலுங்கு தமிழ் என இரண்டு மொழிகளில் இது எடுக்கப்பட்டாலும், படத்தின் சாயல் என்னவோ முழுக்க முழுக்க தெலுங்கு படம் பாணியிலேயே இருப்பதாக ரசிகர்கள் கூறினர். இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் பெரிய அளவுக்கு எடுபடவில்லை.
அதேசமயம் தெலுங்கு சினிமாவில் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. தனுஷிற்கு அங்கு ஒரு மார்க்கெட்டையும் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது, தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.
வெளிநாட்டில் ஹோட்டல் நிறுவனத்தில் வேலை செய்து வரும் தனுஷ், ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊருக்கு திரும்பி தனது தந்தை விரும்பியது போலவே பழமையான இட்லி கடையை திறக்கிறார். இதன் பிறகு கதையில் நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்கள்தான் திரைப்படத்தின் மையக்கரு. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் இந்த திரைப்படம், திரையரங்குகளில் வசூலையும் குவித்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த சென்று விட்டார் தனுஷ். இதில் தனுஷின் 54வது திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் ராஜா. இவரது இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் போர் தொழில். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது. இதன் காரணமாகவே தனுஷ் விக்னேஷ் ராஜா கூட்டணி மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஐசரி கணேஷ் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில் அதன் சூட்டிங் பணிகள் நிறைவு பெற்று இருப்பதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வெறும் மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. அதுமட்டுமல்ல அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்த திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்து, தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்த ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறார்.





