விஜய் வெகு சீக்கிரமாகவே அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதற்காகவே மூன்று வருடங்கள் நடிப்புக்கு பிரேக் எடுத்து கட்சி வேலைகளை கவனிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. சமீபத்தில் கூட பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு கல்விச்சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சி இப்போது வரை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் அமீர் ஒரு பிரபல ஊடகத்திற்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அப்போது நிருபர், விஜய்யின் அரசியல் வருகையை குறித்து கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் அமீர், “நான் ஒரு உவமையாக ஒரு உதாரணத்தை கூறுகிறேன். அதில் இருந்து எதாவது புரிகிறதா என்று பாருங்கள். ஏரியில் மீனவர்கள் மீன் பிடிக்கப்போகிறார்கள். அவர்களுக்கு அது வாழ்வாதாரம், தொழில். ஒருவர் ஒரு சொகுசு காரில் உட்கார்ந்துகொண்டு ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறார். அது அவரது பொழுதுபோக்கு.

ஆக இந்த இரண்டுமே மீன் பிடிப்பதுதான். ஒரு சாராருக்கு அது வாழ்வியல். மற்றொருவருக்கு அது பொழுதுபோக்கு. இரண்டுமே வெறும் மீன் பிடிப்பது என்று மட்டும் சொல்லி கடந்துவிட முடியாது. இரண்டு பேரும் மீனை பிடிப்பது உணவுக்காகத்தான். ஒருத்தருக்கு அது வாழ்வியல், இன்னொருத்தருக்கு பொழுதுபோக்கு. ஆனால் இரண்டு இடங்களிலுமே மீன் உணவாகத்தான் போகப்போகிறது. மக்களும் அப்படித்தான்” என கூறியுள்ளார். அமீரின் இந்த கருத்து விஜய் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.





