தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஏஆர் முருகதாஸ். குறிப்பாக அவரது இயக்கத்தில் வெளியான கஜினி துப்பாக்கி கத்தி ஏழாம் அறிவு ரமணா சர்க்கார் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. அவரது கதைக்களமே ரசிகர்கள் ரசிக்கும் விதமாக உருவாக்கப்பட்டு இருக்கும்.
இந்தியில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. தமிழில் சூர்யா நடித்த கஜினி படத்தை இந்தியில் எடுத்த போது அந்த படத்தில் அமீர்கான், சூர்யா நடித்த கேரக்டரில் நடித்திருந்தார். தெலுங்கில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதே நேரத்தில் மகேஷ்பாபுவை ஹீரோவாக வைத்து ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்திருந்தார். தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் நடிகர் சல்மான்கான் நடித்த படம் சிக்கந்தர். சமீபத்தில் வெளியான இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.
இப்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வெளிவர உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இது அவரது 23வது படம். மேலும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் விக்ராந்த் வித்யுத் ஜம்வால் டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவி நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கிறார். வருகிற செப்டம்பர் 5ம் தேதி மதராஸி படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்து கூறியதாவது, தாய் மொழியில் படம் பண்ணுவது என்பது பெரிய பலம். ஏனென்றால் தினமும் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதை காட்சிகளில் வைக்கும் போது மக்களிடையே ஓர் இணைப்பு இருக்கும். வேறு மொழியில் படம் பண்ணும் போது அன்றைய தினத்தில் என்ன நடக்கிறது, ரசிகர்கள் என்ன ரசிக்கிறார்கள் என்பது தெரியாது. வெறும் கதை திரைக்கதையை நம்பி மட்டுமே படம் பண்ண வேண்டும். அப்படி பார்க்கும்போது தமிழ்தான் முழு படம். தெலுங்கு ஓகே தான்.
ஏனென்றால் தெலுங்கு நமது மொழி மாதிரியே கிட்டத்தட்ட இருக்கும் என்பதால் கண்டுபிடித்து விடலாம். இந்தியில் எல்லாம் ஒன்றுமே தெரியாது. ஏனென்றால் தமிழில் எழுதுவோம் அதை ஆங்கிலத்தில் மாற்றி பின்பு இந்தியில் மாற்றி திரையில் வரும். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யூகித்துக் கொள்ளலாமே தவிர சரியாக என்ன பேசுகிறார்கள் என்பதை உணர முடியாது. மொழி தெரியாத ஊரில் படம் பண்ணும் போது நாம் மாற்றுத்திறனாளி போல் தான் உணர வேண்டும். தாய் மொழியில் படத்தை எடுப்பது போல முழு பலத்துடன் இந்தியில் படத்தை இயக்க முடியாது என்று ஏஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





