தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்களை தரும் இயக்குனர்கள் வெகு சிலரே உள்ளனர். பெரும்பாலான இயக்குனர்கள் கமர்ஷியல் என்ற பெயரில் ரசிகர்களை ஏமாற்றும் விதமான படங்களை இயக்கி, ஹீரோக்களை மையப்படுத்திய கதைகளை திரைப்படமாக்கி குப்பை படங்களை எடுத்து தள்ளுகின்றனர்.
இது போன்ற படங்கள் வெற்றி பெறுவதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் லாபம் பார்த்தாலும் கலை ரீதியாக அது சிறந்த படைப்புகளாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட பல படங்கள் தமிழில் வந்து ஜெயிக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் மன உணர்வுகளை சொல்லும் யதார்த்த படங்களும் வெளியாகி, ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
பண்ணையாரும் பத்மினியும் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண்குமார். ஜெயப்பிரகாஷ் துளசி விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் பாலசரவணன் நீலிமா ராணி நான் கடவுள் மகாதேவன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. முதுமை காதலையும், கார் மீது அவர்கள் காட்டும் அன்பையும் கதைக்களமாக கொண்ட இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த சேதுபதி, சிந்துபாத் ஆகிய படங்களை அருண்குமார் இயக்கினார். இதில் சேதுபதி வெற்றி பெற்றது. சிந்துபாத் வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் சித்தா படத்தை அருண்குமார் இயக்கினார். சிறுமிகள் மீதான பாலியல் தொல்லை குறித்து பேசிய இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
சித்தா படம் கொடுத்த அபார வெற்றிக்கு பிறகு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படம் வருகிற மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் 2ம் பாகமாக வெளிவருகிறது. அடுத்து முதல்பாகம் உருவாக உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் இயக்குனர் அருண்குமார் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நடிகர்கள் விக்ரம் விஜய் சேதுபதி சித்தார்த் எஸ்ஜே சூர்யா பாலசரவணன் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.





