கடந்த 1999ம் ஆண்டில் சேது படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்தவர் பாலா. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து சினிமா கற்றவர். விக்ரம் நடித்த சேது படம் பெரிய வெற்றியை பெற்றது. பாலாவுக்கும் விக்ரமுக்கும் சினிமா வாழ்க்கையில் புதிய பயணத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
தொடர்ந்து நந்தா நான் கடவுள் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை வணங்கான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலா, 25 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறார். ஆனால் அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 10ஐ கூட இன்னும் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ம் ஆண்டில் வெளியான தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு பாலா இயக்கிய படம் வணங்கான். 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி 10ம் தேதி இந்த படம் வெளியானது. அருண்விஜய் இந்த படத்தில் வாய் பேசாத ஒரு மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்து பிறகு விலகி கொண்டார். பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் வணங்கான் படம் ஓரளவுக்கு திருப்தி தந்த படம்தான். இந்நிலையில் இதுவரை இயக்கிய படங்களில் உங்களுக்கு மைல் கல்லாக ஆத்ம திருப்தி தந்த படங்கள் எது என்ற கேள்விக்கு சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் பாலா பதில் தந்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் பாலா கூறியதாவது, ஆர்ட்டிஸ்ட்களுக்காக படம் பண்றதை விட ஜனங்களுக்காக அவர்கள் பட்ட வலியை சொன்ன படங்கள் என்றால் 2 படங்கள்தான். மாற்றுத்திறனாளிகள் பற்றிய நான் கடவுள் படம், டீ எஸ்டேட் போய் கஷ்டப்பட்ட அடிமை தொழிலாளர்கள் பற்றிய பரதேசி படம், அந்த 2 படங்களும்தான் எனக்கு ஆத்ம திருப்தியை தந்த படங்கள்.
ஆர்ட்டிஸ்ட்டுக்களுக்காக பண்ணாமல், ஜனங்களுக்காக பண்ணியதற்காக ஒரு ஆத்ம திருப்தியை தந்த படங்கள் என்றால் அது இந்த 2 படங்களும்தான். நான் கடவுள் மற்றும் பரதேசி படங்கள் ரொம்ப திருப்திபடுத்தியது. மற்ற படங்கள் எல்லாம் கமர்ஷியல்தான் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் பாலா பேசியிருக்கிறார்.





