துள்ளுவதோ இளமை என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படத்திலேயே, இவர் எல்லாம் ஒரு நடிகரா என பலரும் தனுஷை கிண்டல் அடிக்க, தனது அடுத்த திரைப்படமான காதல் கொண்டேனில் அசுரத்தனமான நடிப்பின் மூலம் பலருக்கும் பதிலடி கொடுத்தார் தனுஷ். அனாதை இல்லத்தில் கல்வி பயின்று, தனிமையில் சிக்கித் தவிக்கும் இளைஞராய் நம் கண் முன்னே வாழ்ந்த தனுஷ், அந்த திரைப்படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டார்.

தொடர்ந்து தனுஷ் நடித்த திருடா திருடி திரைப்படம் வெற்றி பெற, அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் சூழ்ந்தது. தனுஷின் நடிப்பு திறமையை அறிந்த பாலு மகேந்திரா, தனது அது ஒரு கனாக்காலம் படத்தில் அவரை நடிக்க வைத்தார். இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் தனுஷின் நடிப்பு அற்புதமாய் இருந்ததாக பலரும் கூறினர்.
பிறகு சுள்ளான், பரட்டை என்கிற அழகுசுந்தரம் உள்ளிட்ட திரைப்படங்களால் பாதை மாறிப்போன தனுஷிற்கு, மீண்டும் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார் வெற்றிமாறன். 2007 ஆம் ஆண்டு அவர் இயக்குனராக அறிமுகம் ஆகிய பொல்லாதவன் திரைப்படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்க படம் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. வடசென்னையை கதைக்களமாக கொண்டு பைக் திருட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர் யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களில் கவனிக்க வைத்த தனுஷ், வெற்றிமாறனின் நுணுக்கத்தை அறிந்து கொண்டு அவருடன் பயணிக்க ஆரம்பித்தார். இது சரியாக ஒர்க் அவுட் ஆக, ஆடுகளம் படத்தில் அவர் நடித்த கருப்பு கதாபாத்திரத்திற்கு தேசிய விருது கிடைத்தது. பிறகு வட சென்னையில் மிரட்ட, அசுரனிலும் தேசிய விருதை தட்டிச் சென்றார் தனுஷ்.
இது ஒரு புறம் இருக்க ஹிந்தி, ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்தார் தனுஷ். அவர் நடித்த ராஞ்சனா திரைப்படம் இந்தியில் பெரும் வெற்றியை பெற, அடுத்ததாக பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கியுடன் இணைந்து சமிதாப் படத்தில் நடித்தார். அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனிடையே இந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நேரடி படங்களை நடிக்க ஆரம்பித்திருக்கிறார் தனுஷ்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய இயக்குனர் பால்கி, இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அப்படி படம் எடுத்தால் அதற்கு சரியான கதாபாத்திரமாக தனுஷ்தான் இருப்பார் என்றும், திரையில் தனுசை இசைஞானியாக நடிப்பதை பார்க்க தான் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இது தனுஷிற்கு தான் அளிக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். பால்கியின் இந்தப் பேச்சால் உற்சாகமடைந்துள்ள தனுஷ் ரசிகர்கள், இது மட்டும் நடந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறி வருகின்றனர்.





