நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார், தமிழில் போடா போடி படம் மூலம் அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய நடிகையாக இருக்கிறார். இவர் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நிக்கோலாய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி, அவர் தனது மனைவி கவிதாவை விவாகரத்து செய்து விட்டார். இவரது முதல் மனைவி கவிதாவுக்கும் நிக்கோலாய் சச்தேவுக்கும் பிறந்த மகள் 15 வயதில் இருக்கிறார். இந்நிலையில் அவர் வரலட்சுமியை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இப்படி பெரிய தொழிலதிபர் என்பதற்காக காசுக்காக தான் நடிகை வரலட்சுமி, நிக்கோலாவை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதை மட்டும் இன்றி நிக்கோலாயின் உடல் தோற்றத்தை வைத்து பயங்கரமாக கிண்டல் செய்து வருகின்றனர். சரத்குமாருக்கு 2 மனைவி ராதிகா, நிக்கோலாய்க்கு 2 மனைவி வரலட்சுமி, ராதிகாவுக்கு 3வது கணவர் சரத்குமார் என கலாய்த்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் சரத்குமார் பேசுகையில், நான் சமூக வலைதளங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர்களுடைய நேரம் போக வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் வாழ்க்கையை விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு தைரியம் இருந்தால், எதை வேண்டுமானாலும் நேரில் வந்து பேச வேண்டும். இப்படி மறைந்து இருந்து பேசுபவர்களுக்கு மனதில் என்ன தைரியம் இருக்கிறது என்று நான் கேட்கிறேன்.
நான் என் மகளுக்காக மட்டும் பேசவில்லை. எல்லா பெண்களுக்காகவும்தான் பேசுகிறேன். உங்கள் மனதில் எழும் கற்பனையை வைத்துக்கொண்டு மற்றவர்களை கண்ணா பின்னா என்று பேசுவதற்கு உரிமை யார் உங்களுக்கு கொடுத்தது. நான் எப்போதும் நெகட்டிவ் கமெண்ட் பார்க்க மாட்டேன். அதை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்துவேன்.
ஆனால் சிலர் இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை பகிர்வது மனதளவில் கஷ்டத்தை தருகிறது. என்னுடைய மகள் வரலட்சுமி பணத்திற்காக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்கின்றனர். அதற்கு நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. வரலட்சுமி எதற்காக திருமணம் செய்து கொண்டார் என்பது அது அவருடைய முடிவு. அவர் நிக்கோலாவை மனதார பிடித்துப் போய்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் சிலர் தவறாக கமெண்ட் செய்து கொண்டு, நேரத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள், என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் நடிகர் சரத்குமார்.





