முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இயக்கிய அனுபவம் குறித்து இயக்குனர் பாரதிராஜா ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது பாரதிராஜா கூறியதாவது, நான் ஹீரோக்களின் இயக்குனர் கிடையாது. பொதுவா எந்த ஹீரோவையும் மனசுல வெச்சு நான் கதை, திரைக்கதை எழுத மாட்டேன். ஆனா நானும் செல்வராஜூம் முதல் மரியாதை கதை எழுதி முடிச்சப்போ, என் மனசுல கம்பீரமா வந்தது சிவாஜிதான்.
முதல் மரியாதை படம் சம்பந்தமாகப் பேச சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அண்ணே உங்களுக்கு இந்தப் படத்துல விக் கிடையாது, மேக்கப் கிடையாது. நீங்க எதுவுமே பண்ண வேணாம். நடிக்கக்கூட வேணாம். நான் சொல்றபடி இங்கிட்டும் அங்கிட்டும் நடங்க உட்காருங்க எழுந்திரிங்க நான் சொல்ற டயலாக் மட்டும் பேசுங்க அது போதும்ன்னு சொன்னேன்.
கொஞ்ச நேரம் என்னைக் குறுகுறுன்னு பார்த்தார். ஆனா எதுவும் சொல்லலை. படப்பிடிப்புக்கு வந்தார். நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு வெவ்வேறு ஆங்கிளில் அவரை நிக்க வெச்சு, நடக்க வெச்சு ஷூட் பண்ணிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துக்கு அப்புறம், ஏண்டா பாரதி… என்னடா படம் பிடிக்கிறே? உன்கிட்ட கேட்கவும் வெட்கமா இருக்குடான்னு கேட்டார். அண்ணே கடைசியாக் காமிக்கிறேண்ணேன்னு மட்டும் சொல்லிட்டேன்.
ஒருநாள் என்கிட்ட டேய் நீ ஒரு தடவை நடிச்சுக் காட்டுன்னு கேட்டார். நான் நடிச்சதைப் பார்த்துட்டு ராதாகிட்ட இவன் நடிக்கிறதுல 10 பெர்சன்ட் நடிச்சாக் கூடப் போதும்…ஜெயிச்சுரலாம்டி பொண்ணேன்னு அவர் சொன்னப்போ, நான் சிலிர்த்துட்டேன். அண்ணே நான் மதுரைல இருந்து சென்னைக்குக் கிளம்பும்போதே, சினிமாவுல நடிச்சு சிவாஜியைக் கவிழ்க்கணும்ன்னு தான் வந்தேன்னு நைஸா சொன்னேன்.
அதைக் கேட்டு ஹேய்…ஹேய்ன்னு வாய்விட்டுச் சிரிச்சவர், ஏண்டா உங்க ஊர்ல முகம் பாக்குற கண்ணாடியே இல்லையாடா?ன்னு கேட்டு என்னைக் கலாட்டா பண்ணிட்டார். முதல் மரியாதை ப்ரிவியூ ஷோ படம் முடிஞ்சு எல்லாரும் வெளியே வந்த பிறகும் சிவாஜி மட்டும் அப்படியே சீட்டுல உக்காந்தே இருந்தார். நான் மெல்ல அவர் பக்கத்துல போய் நின்னேன். என் பக்கம் திரும்பிப் பார்த்தார்.
அவர் முகம் அப்படியே நெக்குருகி இருந்தது. ஹி வாஸ் வெரி எமோஷனல். ஏண்டா காட்டுப் பயலே. எப்படிடா இப்படிப் படம் எடுத்தே? இப்பத்தாண்டா தெரியுது. ஷூட்டிங்ல நீ என்னை அங்கே, இங்கே அடிக்கடி திரும்பச் சொன்ன சூட்சுமம் புரியுது. இது சாதாரணப் படம் இல்லடா, இன்டர்நேஷனல் கிளாஸிக்டான்னு அப்படியே என்னை இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.





