தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் ரசிகர்களால் இயக்குனர் இமயம் என்று கொண்டாடப்படுபவர் மூத்த இயக்குனர். இப்போது 84 வயதான நிலையில் பல ஆண்டுகளாகவே அவர் படங்கள் இயக்குவதில்லை. ஆனால் சில ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்தார். நம்ம வீட்டுப்பிள்ளை திருச்சிற்றம்பலம் துடரும் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
84 வயதான நிலையில் முதுமையால் வரும் உடல்நல பாதிப்புகள் மற்றும் கடந்த ஆண்டில் அவரது மகன் நடிகர் மனோஜ் மறைவு காரணமாக பாரதிராஜா உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயக்குனர் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தவறான வதந்தி பரவிய நிலையில் மருத்துவமனை நிர்வாகமும் மருத்துவ அறிக்கை அளித்து, அவர் சிகிச்சையில் இருப்பதை உறுதி அளித்தது. அந்த நேரத்தில் இயக்குனர் ஆர்கே செல்வமணி தலைமையில் இயக்குனர்கள் குழுவும் மருத்துவனைக்கு நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அவர் சிகிச்சயைில் இருப்பதை உறுதி செய்தது.
தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது உடல் நிலையில் மாற்றம் இல்லை என்றாலும் தீவிர சிகிச்சை அளிப்பதாக டாக்டர்கள் தரப்பில் இருந்து உறுதியான தகவல் வெளியானது.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீட்டிலிருந்து தற்போது அவர் முழுமையான ஓய்வெடுத்து வருகிறார். ஆனாலும் அவரை சந்திக்க யாருக்கும் அனுமதியில்லை.
அவருக்கு நினைவில் ஏற்பட்ட மறதி மற்றும் சில உடல் நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை டாக்டர்களின் அறிவுறுத்தல்படி குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில் 84 வயதான பாரதிராஜா, 2 மாதங்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு நலமுடன் திரும்பியது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. அவர் நலமுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை.





