தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஏஆர் முருகதாஸ், பல வெற்றிப் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். தமிழில் தர்பார் இந்தியில் சிக்கந்தர் ஆகிய தோல்வி படங்களை தந்ததை தொடர்ந்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்திருக்கிறார். மலையாள நடிகர் பிஜூமேனன் விக்ரம் டான்சிங் ரோஸ்சபீர் உள்ளிட்டோர் மதராஸி படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
மதராஸி என்றால் வடஇந்தியர்கள் தமிழர்களை அழைக்கும் சொல்லாக உள்ளது. படத்தின் வில்லன் வட இந்தியாவை சேர்ந்த வித்யூத் ஜம்வால். அதனால் இது வட இந்திய வில்லனுக்கும் தமிழ் இளைஞனுக்குமான மோதல் கதை என்ற ஒரு விமர்சனம் வேகமாக பரவி வருகிறது. இது தற்போதைய சூழலில் வட இந்திய மக்கள் தமிழகத்தில் குடியேறிய நிலையில் இந்த படம் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மதராஸி படம் குறித்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, 6 மாதத்துக்கு முன்பே உருவான கதையை சிவகார்த்திகேயனக்காக மதராஸியாக மாற்றி இருக்கிறேன். சென்னை தான் படத்தின் கதைக்களமாக உள்ளது. படத்தில் வில்லன் வட இந்தியாவை சேர்ந்தவர். இந்த கேரக்டரில் வித்யூத் ஜம்வால்தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால் அவர் இப்போது அங்கு இந்தியில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் நடிப்பாரா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் நான் அழைத்தவுடன் சென்னைக்கு வந்து இறங்கி விட்டார். ஒரு வட இந்தியரின் பார்வையில்தான் கதை பயணிக்கும். சிவகார்த்திகேயன் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் இரண்டு வேடங்களில் நடிக்கவில்லை. இரண்டு தோற்றங்களில் தான் நடித்திருக்கிறார்.
பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்துடன் ஒரு நாயகியை தேடிய போது கன்னடத்தில் நடித்த ருக்மணி வசந்த் என்னுடைய நாயகி மாலதியாக தெரிந்தார். அதனால் அவரை நாயகி ஆக்கிவிட்டோம். இப்போது புதிதாக முளைத்திருக்கும் ஒரு ஆபத்தை பற்றி படம் பேசுகிறது. இந்த ஆபத்து நாளை நமக்கும் வரலாம் என்று எச்சரிக்கை செய்யும் படமாக இது இருக்கும் என்று மதராஸி படம் குறித்து ஏஆர் முருகதாஸ் விளக்கம் தந்திருக்கிறார்.





